ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 18 ரன்களில் வென்றுள்ளது ஆப்கானிஸ்தானை கிரிக்கெட் அணி.
ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. செதிக்குல்லா அடல் 64 ரன்களும், இப்ராஹிம் ஸத்ரான் 65 ரன்களும் எடுத்தனர்.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்களுக்கு எடுத்தது. இதன் மூலம் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. பரூக்கி, ரஷீத் கான், முகமது நபி, நூர் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் அணிக்கு ஆப்கானிஸ்தான் உடனான தோல்வி முதல் தோல்வியாக அமைந்துள்ளது. வரும் 7-ம் தேதி இந்த தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.