டிரினிடாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
டிரினிடாட்டில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 36, ஹுசைன் தலத் 31, அப்துல்லா ஷபிக் 26, சைம் அயூப் 23. கேப்டன் முகமது ரிஸ்வான் 16 ரன்கள் சேர்த்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு 35 ஓவர்களில் 181 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இலக்கை நோக்கிய விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 33.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷெர்பேன் ரூதர்போர்டு 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், ராஸ்டன் சேஸ் 47 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்களும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 31 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 26 ரன்களும் சேர்த்தனர்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-1 சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஆட்டம் இன்று இரவு நடைபெறுகிறது.