துபாய்: பாகிஸ்தான் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான முகமது நவாஸ்தான் இப்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியுள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. இந்த சூழலில் வியாழக்கிழமை அன்று மைக் ஹெசன், நவாஸை புகழ்ந்துள்ளார். அண்மையில் முடிந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை நவாஸ் கைப்பற்றி இருந்தார்.
“அவர் (நவாஸ்) மாதிரியான ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் அணியில் இருக்கும் போது, பிட்ச் எப்படி இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. எங்கள் அணியில் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதில் முகமது நவாஸ் ஒருவராக உள்ளார். இப்போது அவர் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர். கடந்த 6 மாத காலமாக அவரது செயல்பாடு அப்படி உள்ளது.
எங்கள் அணியில் அப்ரார் அகமது, சுஃப்யான், சயிம் அயூப், சல்மான் அலி ஆகா ஆகியோரும் உள்ளனர். இருந்தாலும் ஆடுகள சூழலுக்கு ஏற்ப இறுதி முடிவு எடுப்போம். எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பு விளையாடி வருகிறார்கள்” என மைக் ஹெசன் கூறியுள்ளார்.