முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது வங்கதேச அணி. 20 ஓவர்களில் 133 ரன்களை மட்டுமே எடுத்த வங்கதேசம் பிறகு பாகிஸ்தானை 125 ரன்களுக்கு மட்டுப்படுத்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றி வரலாறு படைத்தது.
ஷெரே பங்ளா ஸ்டேடியம் நேற்று நிரம்பி வழிந்தது. 15/5லிருந்து பாகிஸ்தான் அணி எதிர்த்துப் போராடியது, ஃபாஹிம் அஷ்ரப் ஃபைட் பேக் அரைசதம் விளாச, அறிமுக வீரர் டானியால் கடைசியில் ஆட்டமிழந்து பாகிஸ்தான் ரசிகர்களின் இதயத்தை நொறுக்கி விட்டார். வங்கதேச ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டனர்.
134 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து பாகிஸ்தானின் டாப் 6 வீரர்கள் இரட்டை இலக்க ஸ்கோரை எட்ட முடியவில்லை. பிட்சில் பந்துகள் எகிறின. ஷோரிபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் தொடர்ந்து பவுன்ஸ் பிட்சில் பாகிஸ்தான் பேட்டிங்கிற்கு கடும் சோதனைகளை அளித்தனர்.
முதலில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது, இப்படி குறைந்த ரன்களில் 5 விக்கெட்டுகளை இழப்பது பாகிஸ்தானுக்கு இதுவே முதல் முறை. சயீம் அயூப் முதல் ஓவரிலேயே ரன் அவுட் ஆனார். டீப் பாயிண்ட்டில் ரிஷாஷ் ஹுசைனின் அட்டகாசமான பீல்டிங் ரன் அவுட்டை உறுதி செய்தது. அடுத்த ஓவரில் ஷோரிபுல் முகமது ஹாரிஸை இன் டிப்பர் பந்தில் எல்.பி. செய்து டக் அவுட் ஆக்கினார். பாகிஸ்தானின் அதிரடி நம்பிக்கை நட்சத்திரம் ஃபகர் ஜமான் இதே ஷோரிபுல் பந்தில் 8 ரன்களில் லெக் சைடில் சென்ற பந்தை தொட்டு கேட்ச் ஆனார்.
தன்சிம் அடுத்த ஓவரில் இரண்டு அற்புதமான, விளையாட முடியாத பந்துகளை வீசினார். ஹசன் நவாஸ், முகமது நவாஸ் இருவரையும் அடுத்தடுத்து எகிறு பந்துகளில் வீழ்த்த பாகிஸ்தான் 15/5 என்று ஆனது. சல்மான் ஆகா ஒரு முனையில் கடைசி ஹோப் ஆக நின்று கொண்டிருந்தவர் தொடர் அழுத்தத்தில் டீப்பில் கேட்ச் ஆகி 9 ரன்களில் வெளியேறினார். குஷ்தில் ஷா 13 ரன்களில் மெஹதி ஹசன் இடம் எல்.பி. ஆகி வெளியேறினார்.
அதன் பிறகுதான் பாஹிம் அஷ்ரஃப், அப்பாஸ் அஃப்ரீடி 41 ரன்களைச் சேர்த்தனர். ஃபாஹிம் அஷ்ரப் மெஹ்தி ஹசனை லாங் ஆனில் சிக்ஸ் விளாசி அட்டாக்கைத் தொடங்கினார். பிறகு லெக் ஸ்பின்னர் ரிஷாத் ஹுசைனை 2 சிக்சர்கள் 1 பவுண்டரி என்று ஒரே ஓவரில் 20 ரன்களைக் குவித்தார். கடைசி 5 ஓவர்களில் 52 ரன்கள் என்று பாகிஸ்தானுக்கு ஒரு சான்ஸ் இருந்தது.
ஆனால் 17வது ஓவரில் ஷோரிஃபுல் அப்பாஸ் அஃப்ரிடியை 19 ரன்களில் வீழ்த்தினார். இதே ஓவரில் ஃபாஹிம் அஷ்ரப் தனது 3வது சிக்சரை விளாசினார். பாஹிம் அஷ்ரப் 38 ரன்களில் இருந்த போது தன்சிம் கேட்சை விட்டார். இல்லையேல் மேட்ச் முன்னமேயே முடிந்திருக்கும். அஷ்ரப் சிக்ஸர் மூலம் அரைசதம் அடித்தார். அறிமுக வீரர் அகமது டானியல் 2 பவுண்டரிகளை அடித்தார். பாஹிம் அஷ்ரப் சிக்ஸ் அடித்த அடுத்த பந்தில் ரிஷாத்தின் தாழ்வான பந்தில் பவுல்டு ஆனார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை எனும் போது டானியல் முஸ்தபிசுர்ரை முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்த பந்தே டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி ஏமாற்றமளிக்க பாகிஸ்தான் 8 ர்ன்களில் தோல்வி கண்டு தொடரை முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிராக இழந்தது.
ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் மெஹதி ஹசன் மற்றும் தன்சிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது பாகிஸ்தான். வங்கதேசமும் 28/4 என்று சரிவுதான் கண்டது. ஆனால் சமீப காலங்களில் வங்கதேசத்தின் ஆபத்பாந்தவனாக திகழ்ந்து வரும் ஜாகிர் அலி 48 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 55 ரன்களை விளாச, ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் மெஹதி ஹசன் மிராஸ் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 33 ரன்களை அடித்து இருவரும் 53 ரன்கள் கூட்டணி அமைத்து வங்கதேசத்தை மீட்டனர். இவர்கள் ஆட்டமிழந்த பிறகு மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்ட வங்கதேசம் 20 ஒவர்களில் 133 ரன்களுக்குச் சுருண்டது. சல்மான் மிர்சா 2 விக்கெட்டுகளையும் அறிமுக வீரர் டானியல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ஜாகிர் அலி தேர்வு செய்யப்பட்டார்.