வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக் கோப்பைப்போட்டியில் தட்டுத் தடுமாறி இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த ஒட்டுமொத்த ஆசியக் கோப்பை அணித் தேர்வு டவுன் ஆர்டர் மாற்றம் அனைத்தும் கவுதம் கம்பீரின் அடிப்படைச் செயல்பாடுகள் மீது கடும் விமர்சனங்களையே எழுப்புகிறது.
இந்திய அணியின் வெள்ளைப்பந்து போட்டிகளில் அற்புதமான பவுலர் அர்ஷ்தீப் சிங். அவர் இல்லாமல் டி20 போட்டிகள் இல்லை என்ற நிலைக்கு அவர் தன்னை தன் திறமையினால் உயர்த்திக் கொண்டவர், ஆனால் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிப்பதாக மீட்பர் வேடமிட்டு நுழைந்த பயிற்சியாளர் கம்பீர் அந்தக் கலாச்சாரத்தை கொல்லைப்புறம் வழியாகத் திரும்ப நுழைத்து வருகிறார். ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் எத்தனை டி20 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது, அந்த அடிப்படையில் அர்ஷ்தீப் சிங் தானே அணியில் இருக்க வேண்டும்?
அர்ஷ்திப் மனதில் அணியில் அவருக்கு பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்திவிட்டு அவ்வப்போது சில போட்டிகளில் மாற்று வீரராக அவரை அழைப்பது அவரது திறமையை அழிக்கும் செயல். கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் உருவாக்கிய திறமையை கம்பீர் அழிக்க உரிமையில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அதே போல் சஞ்சு சாம்சனைக் காலி செய்ய அணியில் ஷுப்மன் கில்லைக் கொண்டு வந்தார். நேற்று சஞ்சு சாம்சனுக்கு முன்னதாக அக்ஷர் படேலை இறக்கி விடுகிறார் சூரியகுமார் யாதவ். கேப்டன்களின் அதிகாரத்தை கம்பீர் தன் கையில் எடுத்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. முந்தைய போட்டியில் சூரியகுமார் யாதவே இறங்கவில்லை. என்ன நடக்கிறது அங்கே? ஒன்றும் புரியவில்லை. வெற்றி தோல்வி வேறு விஷயம், ஆனால் திறமைகளை ஒழித்துக் கட்டும் செயல்தான் புரியவில்லை.
அதே போல் ரிங்கு சிங் என்ற அதிரடி பினிஷர் கோலியினால் வளர்த்தெடுக்கப்பட்டவர், ஏன் கம்பீரே இவரை பற்றி கேகேஆர் பயிற்சியாளராக இருந்த போது விதந்தோதினார், ஆனால் போகப்போக அவரை கேகேஆர் அணியிலேயே 10 பந்து 5 பந்து மீதமிருக்கும் போது இறக்கிவிட்டு அவர் திறமையையும் அழித்து விட்டார். இப்போது ஆசியக் கோப்பை அணியில் ரிங்கு சிங் இருக்கிறார், ஆனால் வாய்ப்பில்லை. ஷிவம் துபேவுக்குத்தான் வாய்ப்பு. ஏனெனில் ஷிவம் துபே சிஎஸ்கே வீரர். இதனால்தான் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை கம்பீர் கொல்லைப்புறமாக நுழைக்கிறாரோ என்று சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.
நேற்று வங்கதேசத்திற்கு எதிராக ஷுப்மன் கில் ஆட்டமிழந்தவுடன் 3ம் நிலையில் ஷிவம் துபேயை இறக்குகின்றனர். அவர் 3 பந்துகளில் அசிங்கமாக ஆடி 2 ரன்களில் கேட்ச் கொடுத்து விட்டு பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்தார். ஏன் சஞ்சு என்ன தவறு செய்தார்? அவரை ஏன் ஒழிக்க வேண்டும்? ஆனால் செய்த தவறை ஒப்புக் கொள்ளாத சூரியகுமார் யாதவ், பரிசளிப்பு நிகழ்ச்சியில், “ஒரு சான்ஸ் எடுத்துப் பார்த்தோம் ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆனால் வரும் போட்டிகளிலும் இதைச் செய்வோம்” என்று அகந்தையுடன் கூறுகிறார் என்றால் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் வாய்ப்பு அந்தோ பரிதாபமா?
சமீபமாக ஷிவம் துபே ஸ்பின் பந்து வீச்சிற்கு எதிராகவும் சரியாக சோபிக்கவில்லை என்பது புள்ளி விவரங்கள் கூறும் உண்மை. ஏப்ரல் 2024க்குப் பிறகே ஷிவம் துபே ஸ்பின்னுக்கு எதிராக வைத்திருக்கும் சராசரி 21. ஸ்ட்ரைக் ரேட்டும் 166-லிருந்து 121 ஆக குறைந்துள்ளது, எந்த அடிப்படையில் ஷிவம் துபே சஞ்சு சாம்சனுக்கு முன்பாகக் களமிறங்கத் தகுதி படைத்தவர்?
இதே கேள்வியைத்தான் ஆகாஷ் சோப்ராவும் வருண் ஆரோனும் கேட்கின்றனர். மேலும் இது போன்ற தர்க்கமற்ற பேட்டிங் வரிசை மாற்றங்களால் எந்தப் பயனும் இல்லை என்றே அவர்கள் வாதிடுகின்றனர்.
கம்பீரின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது, சர்பராஸ் கான், ஸ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங்… இன்னும் பட்டியல் நீளாதிருக்க பிசிசிஐ-யின் புதிய தலைவர் கண்டிப்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.