லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 138 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து பதிலடி கொடுத்தது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அபாரமாக செயல்பட்டு 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 5, மார்கோ யான்சன் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 22 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது. கேப்டன் தெம்பா பவுமா, டேவிட் பெடிங்ஹாம் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல்
இருந்தனர்.
முன்னதாக எய்டன் மார்க்ரம் 0, ரியான் ரிக்கெல்டன் 16 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தனர். வியான் முல்டர் 6 ரன்களில் பாட் கம்மின்ஸ் பந்திலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் பந்திலும் போல்டானார்கள். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து விளையாடியது.
நிதானமாக விளையாடி வந்த தெம்பா பவுமா 84 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தை கவர் டிரைவ் செய்த போது மார்னஷ் லபுஷேனின் அற்புதமான கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு தெம்பா பவுமா, பெடிங்ஹாம் ஜோடி 64 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் கண்டது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கைல் வெர்ரெய்ன் 39 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மார்கோ யான்சன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து நடையை கட்டினார்.
பாட் கம்மின்ஸ் ஒரே ஓவரில் கைப்பற்றி இந்த 2 விக்கெட்களும் தென் ஆப்பிரிக்க அணியின் அழுத்தத்தை அதிகரித்தது. நிதானமாக பேட் செய்து வந்த டேவிட் பெடிங்ஹாம் 111 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இதன் பின்னர் களமிறங்கிய கேசவ் மகாராஜ் 7 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி கூட்டணியால் ரன் அவுட் ஆனார். கடைசி வீரராக காகிசோ ரபாடா ஒரு ரன்னில் பாட் கம்மின்ஸ் பந்தில் நடையை கட்ட தென் ஆப்பிரிக்க அணி 57.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 18.1 ஓவர்களை வீசி, 28 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் 2, ஜோஷ் ஹேசில்வுட் ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி விரைவாக விக்கெட்களை இழந்தது.
உஸ்மான் கவாஜா 6, கேமரூன் கிரீன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தனர். மார்னஷ் லபுஷேன் 22 ரன்களில் மார்கோ யான்சன் பந்தில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் 13, பியூ வெப்ஸ்டர் 9, பாட் கம்மின்ஸ் 2 ரன்களில் லுங்கி நிகிடி பந்தில் நடையை கட்டினர். டிராவிஸ் ஹெட்டை 9 ரன்னில் போல்டார்க்கினார் வியான் முல்டர். 40 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. அலெக்ஸ் கேரி 50 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் வெளியேறினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா, லுங்கி நிகிடி தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர். யான்சன் மற்றும் வியான் முல்டர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸி. இந்த ஆட்டத்தின் முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் நாள் ஒன்றுக்கு 14 விக்கெட்டுகள் வீதம் வீழ்ந்துள்ளது.