முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சிசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 101 ரன்களில் ஆல் அவுட் செய்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியின் பந்து வீச்சுக்கு வலு சேர்க்கும் வகையில் ஹேசில்வுட் ஆடும் லெவனில் இடம்பெற்றார். அதோடு இந்த போட்டியில் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் முழு உடற்தகுதியை பெற்று ஃபீல்ட் செய்தார். அணியை வழிநடத்தினார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை. 2-வது ஓவர் தொடங்கி சீரான இடைவெளியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது.
ப்ரியன்ஷ் 7, பிரப்சிம்ரன் 18, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2, ஜாஸ் இங்கிலிஸ் 4, நேஹல் வதேரா 8, ஷஷாங் சிங் 3, முஷீர் கான் 0, ஸ்டாய்னிஸ் 26, ஹர்ப்ரீத் பிரார் 4, ஓமர்சாய் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆர்சிபி தரப்பில் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். யஷ் தயாள் 2, புவனேஸ்வர் மற்றும் ஷெப்பர்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆர்சிபி அணி பவுலர்கள் பந்துவீச்சில் தங்களது திட்டங்களில் தெளிவாக இருந்தனர். பவுன்சர், கூக்லி உள்ளிட்டவற்றை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை சர்ப்ரைஸ் செய்தனர். இந்த ஆட்டத்தில் 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டி வருகிறது. இதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு ஆர்சிபி முன்னேறும்.