போர்ச்சுகலில் நடைபெற்ற மையா சிடாடே டோ டெஸ்போர்டோ 2025 தடகளப் போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீ சங்கர் தங்கம் வென்றார். இந்தப் போட்டிகள் போர்ச்சுகலின் மையா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றன. இந்தப் போட்டியில் நீளம் தாண்டுதலில் பிரிவில் பங்கேற்ற முரளி ஸ்ரீசங்கர், 7.75 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். போலந்து வீரர் பியோட்டர் டார்கோவ்ஸ்கி 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் கிறிஸ் மித்ரேவ்ஸ்கி 3-வது இடத்தையும் பெற்றனர்.
எம்சிசி முருகப்பா ஹாக்கி: ஆர்எஸ்பிபி அணி சாம்பியன்: எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆர்எஸ்பிபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த ஹாக்கி போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பிபி அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை அணியை (ஐஎன்என்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஆர்எஸ்பிபி அணிக்காக ஷிவம் ஆனந்த் (8-வது நிமிடம்), பங்கஜ் ராவத் (37-வது நிமிடம்), சையத் நியாஸ் ரஹீம் (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். இந்திய கடற்படை அணிக்காக ஆகிப் ரஹீம் ஆரிப் 15-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார்.
பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம்: இறுதிச் சுற்றில் ஹன்ஸ்மோக்-அரோனியன் மோதல்
பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதியில் அமெரிக்க வீரர்கள் ஹன்ஸ்மோக் நிமேன், லெவன் அரோனியன் ஆகியோர் மோதவுள்ளன.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இந்த செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 3-1 என்ற கணக்கில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா 1.5 – 0.5 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க வீரர் வெஸ்லி சோவை சாய்த்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் கார்ல்சன், இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஹிகாரு நகமுரா, பேபியோ கருனாவை வென்றார்.
இதைத் தொடர்ந்து இன்று இறுதிச் சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில் ஹன்ஸ்மோக் நிமேன், லெவன் அரோனியன் மோதுகின்றனர். 3, 4-வது இடங்களுக்கான போட்டியில் மேக்னஸ் கார்ல்சனும், நகமுராவும் விளையாடுகின்றனர்.