லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி உச்சபட்ச நாடகங்களுடன் இங்கிலாந்து வெற்றியில் முடிவடைந்தது. இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் இருதயம் உடைந்த தருணமே தோல்வி.
ஆனால், ஜடேஜா என்னும் போர் வீரன், ‘தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா’ என்று விக்ரமாதித்ய கதைகளில் வரும் வரிகளுக்கு உதாரணமாகத் திகழ்ந்து இறுதி வரை வீழ்த்தப்பட முடியாத வீரராக நின்றார். ஆனால், கண்களிலோ சோகம்.
கோபக்கனல் உடன் எதிரணி வீரர்களை எதிர்கொண்டு வார்த்தையாடல் செய்த சிராஜின் சிரசு குனிந்தது. தோல்வி என்பது விளையாட்டின் இறுதி முடிவு. ஆனால் விளையாட்டு என்பதே உடல், மனம், புத்தி உள்ளிட்ட ஆற்றல்களின் மோதலே. அதில் ஜடேஜா, சிராஜ் தலை நிமிர்ந்து நிற்கலாம்.
இன்னும் 2-3 ஓவர்கள் நின்றிருந்தால் போதும் இங்கிலாந்துக்குத்தான் இருதயம் உடைந்திருக்கும். ஆனால், வெற்றியை அத்தனை எளிதாக இந்திய அணி அளித்து விடவில்லை என்பதுதான் இந்த புதிய இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
சிராஜ், நேற்று பஷீர் பந்தில் துரதிர்ஷ்டவசமாக பவுல்டு ஆன போது முழந்தாளிட்டு தலையைக் குனிந்து அமர்ந்திருந்தார். ஏனெனில் மணிக்கணக்காக தடுத்தாடி, உடலில் பவுன்சர்களைத் தாங்கி நின்று விட்டு கடைசியில் பஷீரின் ஒன்றுமில்லாத ஒரு பந்து தானாகவே போய் ஸ்டம்பில் அடித்தது என்றால் இதை விட ஹார்ட் பிரேக் வேறு எதுவும் இருக்க முடியாது. ரவி சாஸ்திரி கூறுவது போல், சிராஜை களத்திலிருந்து அழைத்துச் செல்ல கிரேன் தான் தேவைப்பட்டிருக்கும்.

வார்த்தை மோதல், உடல் மோதல்கள் இருந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்களின் செய்கை பாராட்டுக்குரியது. ஜாக் கிராவ்லி, ஜோ ரூட், ஹாரி புரூக் மூவரும் சிராஜ் அருகே சென்று அவரை எழுந்து நிற்க உதவி செய்து கைகொடுத்தனர். முதுகில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தனர்.
பென் ஸ்டோக்ஸ், இன்னொரு அயராத போர் வீரன். அவர் இன்னொரு போர் வீரனான சிராஜை வந்து ஆறுதலாகத் தட்டிக் கொடுத்ததோடு உத்வேகம் அளிக்கும் விதமாக சிராஜின் நெஞ்சைக் கையால் குத்தினார்.
சிராஜ் தனது ஆன்மாவையும் உயிரையும் கொடுத்து 30 பந்துகள் ஆடினார். எதிர்முனையில் ரவீந்திர ஜடேஜா ஒரு அயராத போர் வீரனாக ஆட்டமிழக்காமல் 181 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 61 நாட் அவுட் என்று அற்புதமான ஒரு டெஸ்ட் இன்னிங்ஸை ஆடினார். முதல் இன்னிங்ஸில் 72, பந்து வீச்சில் டைட்டாக சில ஓவர்கள் நல்ல பீல்டிங் என்று அணிக்கு உற்சாகமான ஒரு ஆல்ரவுண்டராகத் திகழ்கிறார் ஜடேஜா. நேற்றைய இன்னிங்ஸ் நம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு மராத்தான் முயற்சி இன்னிங்ஸ் ஆகும்.
ஜோ ரூட், ரவீந்திர ஜடேஜாவை ஆறுதல் படுத்தினார். ஜடேஜா அரைசதம் அடித்த பிறகு தனது வழக்கமான வாள் வீச்சு ஸ்டைலையும் செய்யவில்லை. ஏனெனில், அவருக்குத் தெரியும் வெற்றிதான் இலக்கு என்பது. பும்ராவையும் சிராஜையும் நின்று ஆட வைத்து வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தார். இந்நிலையில், மனமுடைந்து நின்று கொண்டிருந்த ஜடேஜாவை ரூட் கைகொடுத்துத் தேற்றினார். ஒரு சில ஆறுதல் வார்த்தைகளையும் ரூட், ஜடேஜாவிடம் கூறினார்.
20 ஆண்டுகளுக்கு முன்பாக எட்ஜ்பாஸ்டனில் நடந்த ஆஷஸ் டெஸ்ட்டில் மைக்கேல் காஸ்பரோவிச் இப்படித்தான் வெற்றிக்கு 3 ரன்கள் இருக்கும் போது லெக் சைடில் கேட்ச் ஆனார். ஸ்டீவ் ஹார்மிசன் பந்தைத் தடுத்தாடிய போது எட்ஜ் ஆகி பின்னால் கேட்ச் ஆனது. காஸ்பரோவிச்சும் அன்று தன் திறமைகளைத் தாண்டி 20 ரன்கள் எடுத்தார், கடைசியில் ஆட்டமிழந்தார். எதிர்முனையில் இதே போல் இருதயம் உடைந்து நின்று கொண்டிருந்தார். 43 ரன்கள் எடுத்தார் பிரெட்லீ. 3 ரன்களில் ஆஸ்திரேலியா தோற்றது. கிட்டத்தட்ட இதே காட்சிகள்தான் அன்றும் இன்றும்.