சென்னை: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது.
10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தனது முதல் லீக் ஆட்டத்தில் கடந்த 1-ம் தேதி சத்தீஸ்கருடன் மோதியது.
இதில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த இரு கோல்களையும் மோனிஷா (39 மற்றும் 60-வது நிமிடம்) அடித்து அசத்தினார். இந்த தொடருக்காக தமிழ்நாடு அணி திண்டுக்கலில் உள்ள பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்று தங்களது திறனை மெருகேற்றியிருந்தனர்.
இந்த முகாமுக்கு திண்டுக்கல் கால்பந்து சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிக்கட்ட தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ள தமிழ்நாடு அணி தனது 2-வது ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி மேற்கு வங்கத்துடன் மோதுகிறது.