மான்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணி வரும் புதன்கிழமை இங்கிலாந்து அணி உடன் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், தேசத்துக்காக விளையாடுவது எனது உந்து சக்தி என இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 1-2 என இந்தியா பின்தங்கி உள்ளது. இந்த தொடரில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் சிராஜ் விளையாடினார். இதன் மூலம் மொத்தம் 109 ஓவர்களை வீசி 13 விக்கெட்டுகளை இதுவரை இந்த தொடரில் அவர் கைப்பற்றியுள்ளார். பணிச்சுமை குறித்தெல்லாம் பேசாமல் தனது ஆட்டத்தில் சிராஜ் கவனம் செலுத்தி வருகிறார்.
“நீங்கள் உங்கள் தேசத்துக்காக விளையாடினால் அதுவே உங்களுக்கு பெரிய உந்து சக்தியாக அமையும். எனக்கும் அப்படித்தான். இதில் ரகசியம் எதுவும் இல்லை.
தேசத்துக்காக களம் காணும் போது எனக்கான எனர்ஜி அதிலிருந்து கிடைக்கிறது. களத்தில் நூறு சதவீதம் எனது உழைப்பை செலுத்த வேண்டுமென்பது எனது இலக்கு. அதன் பிறகு எனக்கான ஓய்வை இரவில் எடுத்துக் கொள்வேன். ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நான் அதை செய்யவில்லை, இதை செய்திருக்கலாம் என்ற விசனம் எதுவும் இல்லாமல் எனது சிறந்த உழைப்பை கொடுப்பேன்.
கடவுள் எனக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்துள்ளார். இந்திய அணிக்காக அதிகளவிலான போட்டிகளில் விளையாடி அணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம்.
ஆட்டத்தில் எனக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஆட்டத்தில் கிடைக்கும் என நம்புவேன். பேட்ஸ்மேன்கள் எனது பந்துவீச்சில் தடுமாறும் போது விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனால் கொஞ்சம் விரக்தி அடைவேன். இருந்தாலும் எனது பணியை தொடர்ந்து செய்வேன்.
லார்ட்ஸ் போட்டியில் நான் அவுட்டாக கூடாது என்பதை உணர்ந்தேன். எனக்கு அதில் நம்பிக்கை இருந்தது. எனது தவறால் நான் ஆட்டமிழப்பேன் என எண்ணினேன். ஆனால், பந்தை பேட்டை கொண்டு மிடில் செய்த போதும் ஆட்டமிழந்தேன். அது ஹார்ட் பிரேக் தருணம். ஏனெனில் நாங்கள் அந்த போட்டியை வென்றிருப்போம்” என சிராஜ் கூறியுள்ளார்.