கிறிஸ் வோக்ஸ் பந்தை பாதத்தில் வாங்கி கடும் காயத்திற்கு ஆளான ரிஷப் பண்ட் இப்போது தனது கடைசி கட்ட மறுசிகிச்சைக் கட்டத்தில் இருக்கிறார். இந்த வார இறுதியில் உடற்தகுதி மதிப்பீட்டாய்விற்குத் தயாராக இருக்கிறார்.
இதனையடுத்து 2025-26 ரஞ்சி டிராபி சீசனின் 2வது பாதியில் ரிஷப் பண்ட் ஆடுகிறார். இது அக்டோபர் 25ம் தேதி தொடங்குகிறது. அதாவது நவம்பர் 14ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புமாறு அவர் இந்த ரஞ்சி போட்டிகளில் தன் திறமையையும் உடற்தகுதியையும் பரிசோதிக்கவுள்ளார்.
ஏற்கெனவே அஜித் அகார்க்கர் இது தொடர்பாக ரிஷப் பண்ட்டிடம் பேசியிருக்கிறார். ஆகவே தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புகிறார் என்னும் நற்செய்தி இப்போதைக்கு உறுதியாகியுள்ளது.
அவரது கால் கட்டுக்கள் நீக்கப்பட்டு இப்போது பாதத்தை நன்றாக அசைக்க முடிகிறது, இயக்க முடிகிறது என்று கூறப்படுகிறது. கால்களுக்கான பிரத்யேக பயிற்சி மற்றும் உடல் எடை பயிற்றுவிப்புகளை இப்போது எடுத்துக் கொண்டுள்ளார்.
அக்டோபர் 15ம் தேதி டெல்லி அணி ரஞ்சி டிராபி போட்டிகளில் ஆடத் தொடங்குகிறது. முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை ஹைதராபாத்தில் சந்திக்கிறது டெல்லி. 2வது ஆட்டம் ஹிமாச்சல் அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4வது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் ஃபுல்டாஸை ரிவர்ஸ் ஸ்விப் ஆடப்போய் தேவையில்லாமல் காலில் வாங்கி கடும் காயமடைந்தார். கால் எலும்பு முறிந்தது. ஆனாலும் கால் முடியாமல் போனாலும் மீண்டும் இறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை மிட்விக்கெட்டில் அடித்த அந்த மெஜஸ்டிக் சிக்சரை யாரும் மறக்கவும் முடியுமோ?
ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியில் ரிஷப் பண்ட் 4 டெஸ்ட் போட்டிகளிலேயே 479 ரன்களை விளாசி இங்கிலாந்தில் ஒரு விக்கெட் கீப்பர் அதிக ரன்கள் என்ற சாதனையைச் செய்தார். இந்தத் தொடரில் 2 சதங்கள், மற்றும் 3 அரைசதங்கள் என்று இங்கிலாந்தை நொறுக்கும் பணியைத் தொடர்ந்தார்.
பண்ட் திரும்பியவுடன் டெல்லி அணியை முதலில் ரஞ்சி டிராபியில் வழிநடத்துவார், இப்போதைக்கு ஆயுஷ் பதோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.