லக்னோ: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 403 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் சதம் விளாசினார்.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்ஸில் 98 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. நாராயண் ஜெகதீசன் 50, சாய் சுதர்சன் 20 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள்.
ஜெகதீசன் 64 ரன்களும், சாய் சுதர்சன் 73 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து தேவ்தத் படிக்கலுடன் இணைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் அதிரடியாக விளையாடினார். 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 103 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 403 ரன்கள் குவித்தது.
சதம் விளாசிய துருவ் ஜூரெல் 132 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 113 ரன்களும், தேவ்தத் படிக்கல் 178 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 129 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாட உள்ளது இந்தியா ‘ஏ’ அணி.