பெங்களூரு: கடந்த ஜூன் மாதம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வின்போது பெங்களூருவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அதன் பிறகு சுமார் மூன்று மாதங்களான நிலையில் ஆர்சிபி அணி முதல் முறையாக ட்வீட் செய்துள்ளது.
ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் முதல் முறையாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களுருவில் விதான சவுதா மற்றும் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதை காண லட்ச கணக்கான மக்கள் இரண்டு இடங்களிலும் குவிந்தனர்.
இதில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் இருந்து ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் மக்கள் நுழைய முயன்ற போது ஏற்பட்ட நெரிசலில் 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
ஆர்சிபி ட்வீட்: அன்புள்ள டுவல்த் மேன் ஆர்மிக்கு இது எங்களின் இதயப்பூர்வமான கடிதம். நாங்கள் பதிவிட்டு சுமார் மூன்று மாதம் காலம் ஆகிறது. உங்களின் கொண்டாட்ட தருணங்கள் மற்றும் நினைவுகளை பகிரும் இடமாக இந்த இடம் அதிகம் இருந்தது. ஆனால், ஜூன் 4-ம் தேதி அனைத்தையும் மாற்றி விட்டது. அந்த நாள் எங்கள் மனதை நொறுங்க செய்தது. அதன் பிறகு இந்த இடம் மவுனமானது.
எங்களது மவுனம் காரணமாக நாங்கள் இங்கு இல்லாமல் இல்லை. துயரத்தால் மவுனம் காத்தோம். கவனித்தோம், கற்றுக் கொண்டோம். பொறுப்பு என்பதை கடந்த சிலவற்றை கட்டமைக்க தொடங்கியுள்ளோம். இந்த இடத்துக்கு இன்று நாங்கள் திரும்பியுள்ளோம். அது கொண்டாட்டத்துடன் இல்லை. அக்கறையுடன் திரும்பி உள்ளோம். ஒன்றாக முன்னோக்கி செல்வோம். கர்நாடகத்தின் பெருமையாக தொடர்வோம் என ஆர்சிபி அணி தெரிவித்துள்ளது.