ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 25 மீட்டர் சென்டர்ஃபயர் அணிகள் பிரிவில் குர்பிரீத் சிங், ராஜ்கன்வர் சிங் சாந்து, அங்குர் கோயல் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,733 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. வியட்நாம் அணி 1,720 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஈரான் 1,700 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின.
மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்தியாவின் மணினி கவுசிக் 617.8 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் ஹனா இம் 620.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், யூன்சியோ லீ 620.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் அணிகள் பிரிவில் மணினி கவுசிக், சுரபி பரத்வாஜ், வினோத் விதசரா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,846 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.