புதுடெல்லி: இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர். இதை சமூக வலைதள பதிவு மூலம் சாய்னா நேவால் அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு பாதைகளில் பயணிக்கச் செய்கிறது. நன்கு யோசித்து மற்றும் பரிசீலித்து நானும் காஷ்யப்பும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரின் வளர்ச்சி மற்றும் அமைதிக்காக நாங்கள் பரஸ்பரமாக எடுத்த முடிவு இது. வருங்காலம் சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். நினைவுகளுக்கு நன்றியுடன் இருப்பேன். எங்களது இந்த முடிவை புரிந்து கொண்டதற்கும், எங்களது பிரைவசிக்கு மதிப்பு கொடுத்ததற்கும் நன்றி கூறுகிறேன்” என சாய்னா கூறியுள்ளார்.
சிறு வயது முதலே சாய்னாவும் காஷ்யப்பும் இணைந்து கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமியில் ஒன்றாக இணைந்து பயிற்சி செய்தவர்கள். ஒலிம்பிக்கில் வெண்கலம் மற்றும் உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற அடையாளத்தின் மூலம் சாய்னா கவனம் ஈர்த்தார். ஆடவர் பிரிவில் பருபள்ளி காஷ்யப் டாப் 10 இடத்தை பிடித்தவர். 2014-ல் காமன்வெல்த்தில் தங்கம் வென்றார். சாய்னா இரண்டு முறை காமன்வெல்த்தில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.