மும்பை: இந்திய அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இருந்தும் லார்ட்ஸ் டெஸ்ட்டில் இலக்கை எட்ட முடியாமல் போனது ஏமாற்றம் தான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 22 ரன்களில் இந்தியா தோல்வியடைந்தது. ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் இறுதிவரை போராடியும் வெற்றிக்கோட்டை கடக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம். இந்நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
“இந்தியா பேட் செய்த விதம் எனக்கு ஏமாற்றமே. 190+ ரன்கள் இலக்கை இந்த இந்திய அணி நிச்சயம் எட்டியிருக்க வேண்டும். களத்தில் ஜடேஜா போராடி ரன் சேர்த்தார். அதை பார்த்து நான் மட்டுமல்ல இந்திய அணியில் உள்ள தரமான திறன் படைத்த பேட்ஸ்மேன்களும் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடரில் 2-1 என முன்னிலை பெற்றிருக்க வேண்டிய வாய்ப்பு அது.
குறிப்பாக இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் போராடி இருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவு மாறி இந்தியாவின் வெற்றியாக அது அமைந்திருக்கும்.
ஜடேஜா அபாரமாக செயல்பட்டார். இது போல அவரது பேட்டிங் செயல்பாடு இருக்கும் வரை இந்திய அணிக்காக தனது ஆட்டத்தை அவர் தொடருவார். அவரது பேட்டிங் மேம்பட்டுள்ளது. சுமார் 80 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் ஒரு ஸ்பெஷல் வீரர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அவரை பார்க்கலாம்” என கங்குலி தெரிவித்தார்.