சென்னை: 12 அணிகள் கலந்து கொள்ளும் புரோ கபடி லீக் 12-வது சீசன் போட்டி வரும் 29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய நகரங்களிலும் ம் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் ஷெராவத்தும், துணை கேப்டனாக அர்ஜுன் தேஷ்வாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அணியின் புதிய ஜெர்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
பவன் ஷெராவத்தை இந்த சீசனுக்கு தமிழ் தலைவாஸ் அணி ரூ.2.26 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. ரெய்டுகளில் அபாரமாக செயல்படும் பவன் ஷெராவத் புரோ கபடி லீக்கில் ஹை ஃப்ளையர் என அழைக்கப்படுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும், 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் பவன் ஷெராவத் முக்கிய பங்கு வகித்திருந்தார்.