சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நாளை (மே 31) காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது மறு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில் இம்முறை தலைவர் பதவிக்கு சுரேஷ் மனோகர் (மதுரை ) போட்டியிடுகிறார். அவரது அணியில் பொருளாளர் பதவிக்கு சிவானந்தம் (தஞ்சாவூர்), துணைத் தலைவர் பதவிக்கு ரவிக்குமார் (திருவள்ளூர்), ராபர்ட் குமார் (காஞ்சிபுரம்), ஆனந்த் (சிவகங்கை), ராதா (கடலூர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
எதிரணியில் தலைவர் பதவிக்கு சண்முகம் (திண்டுக்கல்) போட்டியிடுகிறார். அவரது அணியில் பொருளாளர் பதவிக்கு மணிகண்டன் (விருதுநகர்), துணைத் தலைவர் பதவிக்கு கண்ணன் (நாகப்பட்டினம்), மணி (ஊட்டி), குமார் (புதுக்கோட்டை) ஆகியோர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 82 வாக்குகள் உள்ளன. இதில் வெற்றி பெறுவதற்கு 52 வாக்குகளுக்கு மேல் பெறவேண்டும்.

சுரேஷ் மனோகர் தலைமையிலான அணியினர் திறமையான வீரர்களை வளர்த்தெடுப்பது, அவர்களை ஊக்குவிப்பது, துடிப்பான கால்பந்து கலாச்சாரத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் கால்பந்து மையமாக உருவாக்குவது, பயிற்சியாளர்கள் திறனை மேம்படுத்துவது, தொழில்நுட்பம், அறிவியல் ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் வெளிப்படையான தேர்தல் மற்றும் நிர்வாக செயல்பாடுகள், மாவட்ட சங்கங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றை வாக்குறுதிகளாக வழங்கி தேர்தலை சந்திக்கின்றனர்.