புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் 400 ரன் சாதனையை முறியடிக்க முயற்சித்திருக்கலாம் என லாரா தன்னிடம் கூறியதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வியான் முல்டர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 367 ரன்களை வியான் முல்டர் எடுத்திருந்தார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு நேர பிரேக்குக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி டிக்ளேர் செய்தது. இதன் மூலம் லாராவின் 400 ரன் சாதனையை முறியடிக்காமல் முல்டர் தவிர்த்தார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பிரையன் லாரா விளாசிய 400 ரன்களே இதுவரை ஓர் இன்னிங்ஸில் விளாசப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது. இந்த சாதனையை முறியடிக்க வியான் முல்டருக்கு ஜிம்பாப்வே உடனான போட்டியில் 34 ரன்களே தேவையாக இருந்தன. ஆனால் அவர், சாதனையை கருத்தில் கொள்ளாமல் டிக்ளேர் முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அது உலக அளவில் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தயில் பேசுபொருளானது. மேலும், ஜாம்பவான் லாராவுக்காக இந்த முடிவை எடுத்ததாக முல்டர் தெரிவித்தார்.
இந்நிலையில், வியான் முல்டர் உடன் லாரா பேசியுள்ளார். அந்த உரையாடல் என்ன என்பது குறித்து முல்டர் இப்போது பகிர்ந்துள்ளார். “நான் லாரா உடன் பேசி இருந்தேன். நான் என்னுடைய லெகசியை உருவாக்குகின்ற காரணத்தால் 400 ரன்னை நோக்கி ஆடியிருக்க வேண்டும் என சொன்னனார். சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியவை என்றும் சொன்னார்.
அடுத்த முறை நான் அந்த நிலையில் இருந்தால் நிச்சயம் அதை எட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என சொன்னார். அது அவரது பார்வையில் இருந்து சுவாரஸ்யமானது. ஆனால், நான் சரியானதைத்தான் செய்தேன் என நம்புகிறேன். நான் நேசிக்கும் விளையாட்டுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது முக்கியமானதாகும்” என்று தெரிவித்தார்.