டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அரிதாகவே வைடுகள் வழங்கப்படுகின்றன. இது ஏன் என்று தெரியுமா? பொதுவாக ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி 20 போட்டிகளில் ஆடுகளத்தின் நடு ஸ்டெம்ப்பில் இருந்து வலது பக்கமும், இடது பக்கம் ஒரு கோடு வரைந்திருப்பார்கள். இதுதான் வைடு லைன். இதை வைத்துதான் வீசப்படும் பந்து வைடா, இல்லையா என்பதை நடுவர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் டெஸ்ட்டில் இதுபோன்ற லைன்கள் கிடையாது.
நடுவர்கள் அதிகளவில் வைடுகள் வழங்கமாட்டார்கள். ஒருவேளை பேட்ஸ்மேன் நிற்கும் கிரீஸில் இருந்து பந்து அதிகம் விலகிச் சென்றால் மட்டுமே வைடு வழங்குவார்கள். எதற்காக டெஸ்ட் போட்டியில் மட்டும் இதை செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் உள்ளது. ஏனெனில் ஒருநாள் போட்டி, டி 20 ஆட்டங்களில் பந்துகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
வரையறுக்கப்பட்ட பந்துகளே உள்ளதால் அதற்குள் பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்கள் சேர்க்க முயற்சிப்பார்கள். அப்படி செய்தால்தான் அதிக ரன்களை இலக்காக கொடுக்க முடியும் அல்லது இலக்கை விரைவாக எட்டிப்பிடிக்க முடியும். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அப்படி இல்லை. ஓவர்கள் அதிகம் இருக்கும். எனினும் விக்கெட்கள் அதே 10 தான்.
இதனால் ரன்கள் சேர்ப்பதை காட்டிலும் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் பேட்ஸ்மேன்கள் கவனம் செலுத்துவார்கள். அதேவேளையில் பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்றுவதில் கூடுதல் மெனக்கெடுவார்கள். இதற்காக பேட்ஸ்மேனின் இடது புறமும், வலதுபுறமும் பந்துகளை அகலமாக வீசுவார்கள். அதற்கு தகுந்தவாறு பீல்டிங் அமைத்து விக்கெட்களை கைப்பற்ற முயற்சிப்பார்கள்.
இப்படி இருதரப்பிலும் திறன் மற்றும் வியூகங்கள் பயன்படுத்தப்படுவதால் டெஸ்ட் போட்டிகளில் நடுவர்கள் அதிகளவில் வைடு வழங்குவது கிடையாது. மேலும் டெஸ்ட் போட்டியில் நாளொன்றுக்கு 90 ஓவர்கள் வரை வீசப்படுவதால் பந்து வீச்சாளர்கள் களைப்படையவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பந்து வீச்சாளர்கள் சில நேரங்களில் அகலமாக வீசுவது உண்டு. இதை துல்லியமாக கவனத்தில் கொண்டு வைடுக்கு ரன்கள் வழங்கினால் அது பேட்டிங் செய்யும் அணிக்கு ஒருவித சாதகத்தை உருவாக்கிவிடக்கூடும்.
இதை தவிர்ப்பதற்காகவும், பந்து வீச்சாளர்கள் தங்களது திறன் மற்றும் வியூகங்களை மேலும் பரிசோதித்து பார்க்கவும், பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதற்காகவும் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் வைடு விஷயங்களில் நடுவர்கள் பாராமுகமாக உள்ளனர். இரு பக்கம்ும் சமஅளவிலான போட்டி இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வியூகம் கடைபிடிக்கப்படுகிறது.