துபாய்: ஐசிசி ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி தற்போது 15-வது இடத்தை பிடித்துள்ளார் இந்திய பவுலர் முகமது சிராஜ்.
அண்மையில் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் சிராஜ். இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று தனது துல்லிய பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார். ‘நான் வீசுகின்ற ஒவ்வொரு பந்தும் தேசத்துக்கானது’ என இந்த போட்டி முடிந்ததும் சிராஜ் தெரிவித்தார். இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார்.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் ஆனார். தற்போது 674 ரேட்டிங் உடன் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் 15-வது இடத்தை சிராஜ் பிடித்துள்ளார். இந்திய வீரர் பும்ரா இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய பவுலரான பிரசித் கிருஷ்ணா 25 இடங்கள் முன்னேறி இந்த பட்டியலில் 59-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5-வது இடத்திலும், ரிஷப் பந்த் 8-வது இடத்திலும் கேப்டன் ஷுப்மன் கில் 13-வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் உள்ளனர்.