லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்ற ஆட்டங்கள் குறித்து பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி பெரும்பாலான செஷன்களில் ஆதிக்கம் செலுத்தியது. 5-ம் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த போதும் ஜடேஜா, பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்கவில்லை.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்ற ஆட்டங்கள் குறித்து பார்ப்போம்.
>சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 12 ரன்களில் தோல்வியை தழுவி இருந்தது இந்தியா. இந்தப் போட்டியில் நயன் மோங்கியா உடன் சிறப்பான கூட்டணி அமைத்திருப்பார் சச்சின். சச்சின் 136 ரன்களில் ஆட்டமிழந்தார்.
271 ரன்களை இந்தியா விரட்டியது. இந்தியா 254 ரன்கள் எடுத்திருந்த போது சச்சின் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அடுத்த 3 விக்கெட்டுகளை வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆல் அவுட் செய்தது பாகிஸ்தான். இந்தப் போட்டியின் போதுதான் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு சென்னையில் போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள்.
>கடந்த 1971-ல் பிரிஸ்பேனில் 16 ரன்களில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட்டத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. பிஷன் பேடி அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.
>கடந்த 1987-ல் பெங்களூருவில் பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் 16 ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா. 221 ரன்களை விரட்டிய இந்திய அணியால் 204 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சுனில் கவாஸ்கர் 96 ரன்கள் எடுத்திருந்தார். இம்ரான் கான், வாசிம் அக்ரம், இக்பால் காசிம், டவுசிஃப் அகமது ஆகியோர் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களாக இருந்தனர்.
>இப்போது லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 22 ரன்களில் இந்திய அணி வெற்றி பெற தவறியது. இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு இந்திய வீரர்கள் ஜடேஜா, பும்ரா, சிராஜ் சவால் கொடுத்தனர்.
>கடந்த 2024-ல் நியூஸிலாந்து அணிக்கு எதிராக வான்கடேவில் 25 ரன்களில் இந்தியா தோல்வியை தழுவியது. 147 ரன்களை விரட்டிய இந்திய அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டி இது. இதன் பிறகு ஆஸ்திரேலியாவில் விளையாடிய அவர்கள் மூவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.