லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்ற ஆட்டங்கள் குறித்து பார்ப்போம்.
ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்துள்ளது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் கைவசம் 4 விக்கெட்கள் இருக்க, வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்தச் சூழலில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர் இந்திய பவுலர்கள். குறிப்பாக, சிராஜ் அதில் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார வெற்றியை பெற்றுள்ளது இந்திய அணி. இந்தச் சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்ற ஆட்டங்களின் பட்டியல் இதோ…
- கடந்த 2006-ல் கிங்ஸ்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் 49 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தியது இந்தியா.
- கடந்த 2002-ல் மேற்குத் இந்தியத் தீவுகள் அணியை 37 ரன்களில் வீழ்த்தி இருந்தது இந்தியா. இந்தப் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
- 2018-ம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்களில் வென்றிருந்தது இந்தியா.
- 1972-ல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இங்கிலாந்து அணியை 28 ரன்களில் வீழ்த்தி இருந்தது இந்தியா.
- 2004-ல் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 13 ரன்களில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது.
- இப்போது ஓவல் மைதானத்தில் இங்கிலாந்தை 6 ரன்களில் இந்தியா வீழ்த்தி உள்ளது.