லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்து நாளும் அனைத்து ஓவர்களையும் முழுமையாக கட்டாயம் அணிகள் வீச வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 300+ ரன்களை கடந்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் 83 ஓவர்கள் வீசப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் 75 ஓவர்கள் வீசப்பட்டது. இரண்டு நாட்களையும் சேர்த்து சுமார் 22 ஓவர்கள் வீசப்படவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நாளொன்றுக்கு 90 ஓவர்கள் வீசப்பட்ட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது. இது இப்போது பேசுபொருளாகி உள்ளது. இது ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. “ஸ்லோ-ஓவர் ரேட் காரணமாக வீரர்களுக்கு அபராதம் விதிப்பது எல்லாம் இதை மாற்றாது. ஏனெனில், இந்த கிரிக்கெட் வீரர்கள் கொஞ்சம் சொகுசானவர்கள் அதனால் அவர்களை இந்த அபராதம் பெரிய அளவில் பாதிப்படைய செய்யாது.
இந்த ஸ்லோ-ஓவர் ரேட் விவகாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விவாதமாக எழுந்துள்ளது. வெப்பம் அதிகமாக உள்ளது, காயங்கள் ஏற்படுகிறது. இப்படி ஆட்டத்தில் ஏற்படும் தாமதங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மட்டும் 90 ஓவர்களையும் முழுமையாக வீச வேண்டி உள்ளது. இது ஆட்டத்தில் முடிவு எட்டுவதற்காக. அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் முதல் நான்கு நாட்கள் மட்டும் நிதானமாக பந்து வீச வேண்டும் என்பது எனது கேள்வி.
ஆனால், ஐந்தாம் நாளில் 90 ஓவர்கள் வீச வேண்டும் என இருக்கும் சூழலில் அதிகம் பிரேக் இருப்பதில்லை. நான் சொல்வது மிகவும் எளிதானது. டெஸ்ட் போட்டியின் அனைத்து நாளும் அணிகள் அனைத்து ஓவர்களையும் முழுவதுமாக வீச வேண்டும். நிச்சயம் இது ஆட்டத்தின் போக்கை மாற்றும் என நான் உறுதி அளிக்கிறேன்” என வாகன் தெரிவித்துள்ளார்.