மான்செஸ்டர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார் இந்திய பவுலர் அன்ஷுல் காம்போஜ். 94 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டை அவர் அவுட் செய்தார்.
24 வயதான அன்ஷுல் கம்போஜ் ஆடும் லெவனில் மாற்று வீரராக இடம்பெற்றார். ஆகாஷ் தீப்புக்கு மாற்றாக அவர் இந்தப் போட்டியில் விளையாடுகிறார். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இது ஆண்டர்சன் சச்சின் டிராபி தொடரின் 4-வது போட்டி. இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 114.1 ஓவர்களில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இங்கிலாந்து அணி இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. அந்த அணிக்காக பென் டக்கெட் மற்றும் ஸாக் கிராவ்லி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸாக் கிராவ்லியை 84 ரன்களில் ஜடேஜா வெளியேற்றினார்.
முதல் விக்கெட் வீழ்த்திய அன்ஷுல் காம்போஜ்: தனது இரண்டாவது ஸ்பெல்லில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் டக்கெட் விக்கெட்டை அன்ஷுல் காம்போஜ் கைப்பற்றினார். பேக் ஆப் தி லெந்தில் பந்தை அவுட்சைட் ஆஃப்பில் வீசி இருந்தார் காம்போஜ். அதை கட் செய்ய முயன்றார் டக்கெட். பந்து சற்றே எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆக அது பேட்டில் பட்டு இந்திய அணியின் மாற்று கீப்பர் துருவ் ஜுரல் வசம் கேட்ச் ஆனது. 94 ரன்களில் டக்கெட் ஆட்டமிழந்தார். இந்திய அணிக்கு இந்த செஷனில் இது முக்கிய விக்கெட்டாக அமைந்தது.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. ஓவருக்கு 4.89 என்ற ரன் ரேட்டில் இங்கிலாந்து அணி ரன் குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 133 ரன்கள் பின்தங்கியுள்ளது இங்கிலாந்து.
35 வருடங்களுக்கு பிறகு ‘ஏகே’: 1990-ம் ஆண்டு மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அனில் கும்ப்ளே அறிமுகமானார். இதே மைதானத்தில் 35 வருடங்களுக்கு பிறகு தற்போது அன்ஷுல் கம்போஜ் அறிமுகமாகி உள்ளார். இருவரும் ஏகே (AK) என்ற முதலெழுத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும், இருவரும் முதல் தர போட்டியின் ஓர் இன்னிங்ஸில் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.