மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக இன்னிங்ஸை தொடங்கிய ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல், 98 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜெய்ஸ்வால், 107 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த கேப்டன் ஷுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 48 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் களத்தில் இருந்து வெளியேறினார் ரிஷப் பந்த். வோக்ஸ் பந்தை ஸ்வீப் ஆட முயன்று பந்தை மிஸ் செய்தார். அது அவரது வலது காலில் பட்டது. இதனால் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது. நடக்கவே முடியாத நிலையில் களத்தில் இருந்து வாகனம் மூலம் அவர் பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் நிதானமாக பேட் செய்த சாய் சுதர்ஷன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 134 பந்துகளில் அவர் அரை சதம் கடந்தார். இது அவர் விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டியாகும்.
151 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். கடைசியாக கடந்த 2022-ல் அயலகத்தில் மூன்றாவது இடத்தில் பேட் செய்து 50+ ரன்களை டெஸ்ட் இன்னிங்ஸில் புஜாரா எடுத்திருந்தார். வங்கதேச அணி உடனான போட்டியில் புஜாரா அந்த ரன்களை எடுத்தார். அதன் பின்னர் இப்போதுதான் வெளிநாட்டில் மூன்றாவது இடத்தில் பேட் செய்த இந்திய வீரர் ஒருவர் அரை சதம் பதிவு செய்துள்ளார்.