சென்னை: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஐபிஎல் 2025 சீசனில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. இது குறித்து அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின், தனது யூடியூப் சேனலில் பேசியிருந்தார்.
அவரது கருத்து சர்ச்சையான நிலையில் இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் கொடுத்திருந்தது. இந்த சூழலில் அது குறித்து அஸ்வின் தற்போது தெளிவுப்படுத்தி உள்ளார். >>அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சை: டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தத்தில் விதிமீறலா? – சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம்: விரிவாக வாசிக்க
“டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளது. எக்ஸ் தளத்தில் அந்த ட்வீட்டை நான் பார்த்தேன். அதில் சிலர் தங்களது கருத்தை கமெண்ட் மூலம் தெரிவித்திருந்தனர். அதில் அஸ்வினிடம் இதை சொல்ல வேண்டும் என சொல்லி இருந்தார்கள்.
நான் இதை நிச்சயம் சொல்லியாக வேண்டும். எங்களது கருத்தை தெரிவிக்கவே நாங்கள் யூடியூபில் வீடியோ வெளியிட்டு வருகிறோம். டெவால்ட் பிரேவிஸ் குறித்து நான் பேசிய வீடியோவில் அவரது ஆட்டம் குறித்து நான் பேசி இருந்தேன். சரியான நேரத்தில் அவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது என கூறி இருந்தேன்.
அந்த வீடியோவை முழுவதுமாக பார்த்தவர்கள் இப்படி சொல்ல வாய்ப்பில்லை. அந்த வீடியோவின் சில நிமிடங்களை மட்டுமே பார்த்தவர்கள்தான் இப்படி திரித்து சொல்கிறார்கள்.
இந்த விவகாரத்தின் தலைப்பு எப்படி வந்திருக்க வேண்டுமென்றால் ‘சரியான நேரத்தில் டெவால்ட் பிரேவிஸை ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே அணி!’ என்றுதான் வந்திருக்க வேண்டும். ஆனால், மாற்றி அர்த்தம் செய்து கொண்டவர்கள் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை.
மேலும், அந்த வீடியோவில் டெவால்ட் பிரேவிஸை எந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்தார்கள் என நான் பேசவில்லை. ஏனென்றால் எனக்கு அது தெரியாது. ஆனால், எனக்கு தெரிந்தது எல்லாம் அவரை ஒப்பந்தம் செய்ய வேறு சில அணிகளும் ஆர்வத்துடன் இருந்ததுதான். அந்த சூழலில்தான் சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்தது. அது மாஸ்டர் ஸ்ட்ரோக். அதை ஹைலைட் செய்துதான் நான் பேசி இருந்தேன்.
இன்றைய காலத்தில் சரியான விஷயத்துக்கு கூட நாம் விளக்கம் தர வேண்டி உள்ளது. இதில் யாருடைய தவறும் இல்லை. வீரர் தரப்பு, அணி மற்றும் ஐபிஎல் நிர்வாகம் என யார் மீதும் தவறு இல்லை” என அஸ்வின் கூறியுள்ளார்.