12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்காக டெல்லி வந்த வெளிநாட்டு பயிற்சியாளர்களை தெருநாய்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்ய ஓட்டப்பந்தய பயிற்சியாளர் டென்னிஸ் மவான்சோ மற்றும் ஜப்பானைச் சேர்ந்த உதவி பயிற்சியாளர் மீகோ ஒகுமட்சு ஆகியோர் இன்று (அக்.03) காலை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களை தெருநாய்கள் கடித்துள்ளன.
இதுகுறித்து கென்ய அணியின் மருத்துவர் மைக்கேல் ஒகாரோ கூறும்போது, “இந்த சம்பவம் காலை 9:30 மணியளவில் நடந்துள்ளது. டென்னிஸுக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. உலக சாம்பியன்ஷிப் போன்ற ஒரு உலகளாவிய நிகழ்வில், இதுபோன்ற சம்பவங்கள் மிகப்பெரிய கவலைக்குரிய அறிகுறியாகும். இந்த நேரத்தில் டென்னிஸைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
ஜப்பான் அணியின் உதவி பயிற்சியாளர் மீகோ ஒகுமட்சு இது பற்றி கூறும்போது, “காலையில் ஒரு நாய் என்னைக் கடித்துவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மருத்துவக் குழு எனக்கு விரைந்து முதலுதவி செய்தனர்” என்று தெரிவித்தார்.
இந்தியன் ஆயில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025 ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு நாய்க்கடி சம்பவங்களும் நடைபெற்ற இடத்திற்கு அருகில் தெருநாய்களுக்கு தனிநபர்கள் தொடர்ந்து உணவளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் டெல்லியில் 25,210 நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டில் 17,847 ஆக இருந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் கிட்டத்தட்ட 3,200 நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் தெருநாய்களின் எண்ணிக்கை 8 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.