Last Updated : 07 Sep, 2025 11:29 AM
Published : 07 Sep 2025 11:29 AM
Last Updated : 07 Sep 2025 11:29 AM

ஜிம்பாப்வேவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி நேற்று ஹராரேவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தங்களது ஆகக்குறைந்த டி20 ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளில் இலங்கையை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ரஜா முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அது ஏன் என்று பிட்சைப் பார்க்கும் போதுதான் தெரியவந்தது. இலங்கை அணி 80 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வேவும் சமீராவின் வேகத்துக்குத் திக்குமுக்காடினாலும் ரியான் பர்ல் மற்றும் தஷிங்க முஷேகிவாவின் பங்களிப்பின் மூலம் 14.2 ஓவர்களில் 84/5 என்று வெற்றி பெற்றது.
பவர் ப்ளேயில் ஜிம்பாப்வே பவுலர் முசரபானி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் இவான்ஸ் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இலங்கை 37/4 என்று சரிந்தது. சரித் அசலங்கா 18 ரன்களையும் தசுன் சனகா 15 ரன்களையும் எடுக்க ஒருவழியாக 75 ரன்களைக் கடந்து 17.4 ஓவர்களில் 80 ரன்களுக்குச் சுருண்டது.
ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 2 விக்கெட்டுகளையும் இவான்ஸ் 3 விக்கெட்டுகளையும் கேப்டன் சிகந்தர் ரஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சிகந்தர் ரஜா தன் 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கொடுக்கவில்லை. அபாய வீரர் கமிந்து மெண்டிசை 4வது பந்தில் டக் அவுட் ஆக்கினார் ரஜா. தன் 3வது ஓவரில் கேப்டன் சரித் அசலங்கா மற்றும் சமீராவை வீழ்த்தி 4 ஓவர்களில் 11/3 என்று ரஜா ஆட்ட நாயகன் விருதுக்குரியவரானார்.
சிறிய இலக்காக இருந்தாலும் சமீரா ஜிம்பாப்வே பேட்டர்களை ஆட்டிப்படைத்து விட்டார். இலங்கை எப்படியிருந்தாலும் இந்த 80 ரன்கள் இலக்கை வெற்றி இலக்காக மாற்ற முடியாது என்று தெரிந்தாலும் சமீரா தன் வேகத்தினால் ஒரு வெற்றி வாய்ப்பை உருவாக்கினார். ததிவனஷே மருமானி மற்றும் சான் வில்லியம்ஸ் இருவருமே சமீராவின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சான் வில்லியம்ஸ் ஆஃப் ஸ்டம்ப் எகிறியது. சிகந்தர் ரஜாவையும் பிளேய்ட் ஆன் செய்தார் சமீரா.
சமீரா 4வது விக்கெட்டையும் வீழ்த்தியிருப்பார், ஆனால் அசலங்கா கேட்சை விட்டார். சமீரா 4 ஓவர் 19 ரன்கல் 3 விக்கெட் என்று கடுமையாக முயன்றார். இன்னும் ஒரு போட்டி உள்ள நிலையில் தொடர் இப்போது 1-1 என்று சமநிலை எய்தியுள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!