பர்மிங்காம்: வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தென் ஆப்பிரிக்க அணி. இந்த ஆட்டத்தில் 60 பந்துகளில் அதிரடியாக ஆடி 120 ரன்கள் சேர்த்து அசத்தினார் தென் ஆப்பிரிக்காவின் பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ்.
இங்கிலாந்தில் கடந்த மாதம் தொடங்கிய இந்த தொடர் நேற்று (ஆக.2) நிறைவடைந்தது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் இதில் பங்கேற்றன. சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடினர்.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நேற்று இந்த தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. ஷர்ஜீல் கான் 44 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். உமர் அமீன் 36, ஆசிப் அலி 28, ஷோயப் மாலிக் 20 ரன்கள் எடுத்தனர்.
20 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. ஹசிம் ஆம்லா மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ஆம்லா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது தென் ஆப்பிரிக்கா. பின்னர் ஜே.பி.டுமினி உடன் இணைந்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஏபி டிவில்லியர்ஸ்.
16.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் 120 ரன்கள், டுமினி 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை டிவில்லியர்ஸ் வென்றார்.