துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திரும்பினர். இந்திய வீரர்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக மைதானத்திலேயே இருந்தனர். சுமார் 90 நிமிடங்கள் கழித்தே பரிசளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்திய வீரர்கள் சிலரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் மனைவி மற்றும் மகள்கள் மைதானத்தில் இருந்தனர், அனைவரும் நல்ல உற்சாகத்தில் இருந்தனர். அதேவேளையில் ஓய்வறை சென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னரே மைதானத்துக்குள் வந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்மாவும், தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மாவும் மேடையில் இருந்த பிற விருந்தினர்களிடம் அதனை பெற்றுக்கொண்டனர். இந்திய வீரர்கள் பதக்கங்களைப் பெற்ற போது மேடையில் இருந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வியை கண்டு கொள்ளவில்லை, அவரும் இந்திய வீரர்கள் பரிசுகளை வாங்க வரும்போது கைதட்டவில்லை. தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியினர் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புலிடமிருந்து பரிசுகளைப் பெற்றனர். தொடர்ந்து மோஷின் நக்வி 2-வது இடம் பிடித்ததற்கான காசோலையை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு பதக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட இருந்தது. இதை மோஷின் நக்வி வழங்குவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி, மோஷின் நக்வியிடம் இருந்து டிராபியை பெறமாட்டோம் என தெரிவித்தது. இதனால் பரிசளிப்பு விழா மேடையில் பரபரப்பு நிலவியது. மோஷின் நக்வியைத் தவிர மேடையில் இருந்த வேறு யாரிடமிருந்தும் கோப்பையைப் பெற இந்திய அணி தயாராக இருந்தது. இதனால் மேடையில் இருந்த துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி காலித் அல் ஜரூனி, இந்தியாவுக்கு ஆசியக் கோப்பையை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோஷின் நக்வி அதற்கு இணங்கவில்லை.
இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சைமன் டவுல், “இந்திய அணி தங்கள் பதக்கங்களையும் விருதுகளையும் இன்று இரவு பெறப்போவதில்லை’ என்று அறிவித்ததோடு, பரிசளிப்பு நிகழ்ச்சி முடிந்தது” என்றார். இதைத் தொடர்ந்து மோஷின் நக்வி மேடையில் இருந்து இறங்கி மைதானத்தின் வெளியேறும் வாயிலை நோக்கி நடந்தார். உடனடியாக, போட்டி அமைப்பாளர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக,கோப்பையை விழா மேடையில் இருந்து எடுத்துச் சென்றனர். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்களுடன், விழா மேடைக்கு அருகில் கூடி சிறிது நேரம் கொண்டாடினர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் கற்பனையாக கையில் கோப்பையை ஏந்தி வந்து சக அணி வீரர்களிடம் வழங்குவது போன்று பாவனை செய்ய கொண்டாட்டம் அரங்கேறியது. வெற்றிக் கோப்பை இல்லாத போதிலும் குழு புகைப்பட அமர்வையும் நடத்தினர்.
உண்மையான டிராபி எது?- பரிசளிப்பு விழா முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்” என்றார்.
ரூ.21 கோடி பரிசு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.21 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ தனது எக்ஸ் வலைதள பதிவில், “மூன்று அடிகள், ஜீரோ பதில். ஆசிய கோப்பை சாம்பியன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவுக்கு ரூ.21 கோடி பரிசுத் தொகை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.28 லட்சம் நன்கொடை: இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் வலைதள பதிவில், “ஆசிய கோப்பை தொடரின் சம்பளத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள்சர்வதேச டி 20-ல் ஒரு போட்டிக்கு ரூ.4 லட்சம் ஊதியமாக பெறுகிறார்கள். இந்த வகையில் ஆசிய கோப்பையில் விளையாடிய ஏழு ஆட்டங்களுக்கு மொத்தம் ரூ.28 லட்சத்தை சூர்யகுமார் யாதவ் நன்கொடையாக அளிப்பார்.
தேவஜித் சைகியா சொல்வது என்ன?- பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறும்போது, “டிராபியை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடம் இருந்து பெறுவதில்லை என்று முடிவு செய்திருந்தோம். அவர், பாகிஸ்தானில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவர். ஆனால் அதற்காக அவர், பதக்கங்களுடன் கோப்பையையும் எடுத்துச் சென்றிருக்கக்கூடாது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கோப்பையும் பதக்கங்களும் விரைவில் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்படும் என்று நம்புகிறோம்.வரும் நவம்பரில் துபாயில் ஐசிசி கூட்டம் நடைபெறுகிறது. இதில் மோஷின் நக்விக்கு எதிராக வலுவான எதிர்ப்பை பதிவு செய்வோம்” என்றார்.
‘அவமரியாதை’- பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும்போது,“இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல. அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் செய்த அவமரியாதை ஆகும். வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி சூர்யகுமார் யாதவ் நடந்து கொள்கிறார்” என்றார்.