லண்டன்: டியூக்ஸ் பந்தின் தரம் மோசமாக உள்ள நிலையில்., அது தொடர்பாக பந்தின் தயாரிப்பு நிறுவனத்தை கடுமையாக சாடியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்தின் தரம் பேசுபொருளாகி உள்ளது. அண்மையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த், டியூக்ஸ் பந்துகள் விரைந்து அதன் வடிவத்தை இழப்பதாக சொல்லி இருந்தார். இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பந்து வீசியபோது வழங்கப்பட்ட புதிய பந்து 10.4 ஓவர்களில் தரம் இழந்தது.
இது தொடர்பாக கள நடுவரிடம் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் முறையிட்டு பந்தை மாற்றினார். இருப்பினும் நடுவர்கள் கொடுத்த மாற்று பந்தும் தரமாக இல்லை என்ற வாதத்தை இந்திய அணி முன்வைத்தது. அதற்கு நடுவர்கள் செவி சாய்க்கவில்லை. இந்தச் சூழலில் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிராட் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
“கிரிக்கெட் பந்து ஒரு சிறந்த விக்கெட் கீப்பரை போல இருக்க வேண்டும். இப்போது பந்து குறித்து நாம் அதிகம் பேச வேண்டி உள்ளதை கவனித்தேன். ஏனெனில், அது ஒரு பிரச்சினையாக எழுந்துள்ளார். அவ்வப்போது பந்தை மாற்ற வேண்டி உள்ளது. இதை ஏற்கவே முடியாது. டியூக்ஸ் பந்தில் சிக்கல் உள்ளது. அதை உற்பத்தியாளரகள் சரி செய்ய வேண்டும். கிரிக்கெட் பந்து 80 ஓவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். 10 ஓவர்களில் மாற்றும் வகையில் அல்ல” என அவர் கூறியுள்ளார்.