சேலம்: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சேலத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. அபிஷேக் தலைமையிலான சேலம் அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி கண்டுள்ளது.
இதன் மூலம் 4 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. திருப்பூர் அணி 2 ஆட்டங்களில் விளையாடி தலா ஒரு வெற்றி, தோல்வியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 2 புள்ளிகளுடன் அந்த அணி 3-வது இடத்தில் உள்ளது.
திருப்பூர் அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. எனினும் இதில் இருந்து மீண்டு வந்து அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் அணிக்கு எதிராக 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.