திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கலில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த திருப்பூர் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. துஷார் ரஹேஜா 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்களும், அதித் சாத்விக் 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்களும் விளாசினர்.
222 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 14.4 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதுல் விட்கர் 24, ஹன்னி சைனி 17, வெங்கடேஷ் புவனேஷ்வர் 12, விமல் குமார் 10 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் அஸ்வின் (1) உட்பட மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.
திருப்பூர் அணி சார்பில் ரகுபதி சிலம்பரசன், மோகன் பிரசாத், இசக்கி முத்து ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.