இந்தியாவுடனான மிகவும் சவாலான சுமையான டெஸ்ட் தொடர் 2-2 என்று டிராவில் முடிவடைய அடுத்து நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கும் ஆஷஸ் சவாலுக்கு இங்கிலாந்து முழு மனத்தளவில் தயாராக போதுமான கால அவகாசம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அதற்குள் ஜோ ரூட் பற்றி வார்னர் விமர்சனம் செய்ய மொயின் அலி கொந்தளித்து விட்டார்.
ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியில் ஜோ ரூட் 537 ரன்களை 3 சதங்களுடன் எடுத்து அசத்தினார். கிரேட் ரிக்கி பாண்டிங்கைக் கடந்து 13,543 ரன்களுடன் அனைத்து கால ரன் எண்ணிக்கையில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் ஆஷஸ் தொடர் பற்றி டேவிட் வார்னர் கூறும்போது ஜோ ரூட் இன்னும் ஆஸ்திரேலியாவில் சதம் எடுத்ததில்லை மேலும் அவர் பேட்டை பந்துக்கு கொண்டு வரும் விதம் ஆஸ்திரேலியா பிட்ச்களில் செல்லுபடியாகாது என்று லேசாக நட்பு கிண்டலடிக்க அது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
“மட்டையை அவர் மேலிருந்து இறக்கும் விதம் ஆஸ்திரேலிய பிட்ச்களில் அவரைக் காலி செய்து விடும். இதை நான் கடந்த காலத்திலும் அவரிடம் பார்த்திருக்கிறேன். ஜாஷ் ஹாசில்வுட்டெல்லாம் அவருக்கு பெரிய சிம்ம சொப்பனமாகத் திகழ்வார். ஆனால் ஜோ ஒரு அருமையான வீரர். எவ்வளவு ரன்களைக் குவித்துள்ளார். இந்த முறை ஆஸ்திரேலியாவில் தன் சதத்தை எடுக்க அவர் முயற்சி செய்வார். நான் பிராடை எதிர்கொண்ட சவாலைப் போது ஹாசில்வுட்டுக்கும் ஜோ ரூட்டுக்கும் ஒரு போட்டி இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.
வார்னரின் இந்தக் கருத்து டெக்னிக்கலாகச் சரியாக இருந்தாலும் மற்றொரு இங்கிலாந்து வீரர் மொயீன் அலி இதை நல்லுணர்வில் எடுத்துக் கொள்ளவில்லை.
அவர் கூறும்போது, “அவர் இன்னும் வார்னராகவே இருக்கிறார். உள்ளபடியே சொல்ல வேண்டுமென்றால் அவர் கொஞ்சம் கோமாளி. ரூட் மண்டைக்குள் புகுந்து அவரை நிலைகுலையச் செய்யப் பார்க்கிறார். அவர் வார்னர் இல்லையா அப்படித்தான் பேசுவார்.
இந்தியாவும் அவரை முடக்க முயற்சி செய்தது முடியவில்லை, ஏகப்பட்ட ரன்களை அடித்தார். ஆம்! சில வீரர்களுக்கு இதைச் செய்ய முடியும், மற்றவர்களிடத்தில் இதைச் செய்ய முடியாது என்பதை வார்னர் உணர வேண்டும்” என்றார்.