புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
புலவாயோ நகரில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இங்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 130 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டேவன் கான்வே 153, ஹென்றி நிக்கோல்ஸ் 150, ரச்சின் ரவீந்திரா 165, வில் யங் 74 ரன்கள் விளாசினர்.
476 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 28.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபசட்மாக நிக் வெல்ச் 47, கேப்டன் கிரெய்க் இர்வின் 17 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கை ரன்னை எட்டவில்லை.
நியூஸிலாந்து அணி தரப்பில் ஜக்கரி ஃபவுல்க்ஸ் 5 விக்கெட்களையும் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.