மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியை டிரா செய்துள்ளது இந்திய அணி. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா இணைந்து 203 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இருவரும் சதம் கடந்து அசத்தினர்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் எடுத்தன. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் இணைந்து 188 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் முதல் செஷனில் ராகுல் 90 ரன்களிலும், கில் 103 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து 203 ரன்களுக்கு வலுவான கூட்டணி அமைத்தனர். இருவரும் சிறப்பாக ஆடி சதம் கடந்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் 143 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்தது இந்தியா. ஆட்டத்தில் முடிவு எட்ட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் முடித்துக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆட்டம் டிரா ஆனது. வாஷிங்டன் சுந்தர் 101 ரன்கள், ஜடேஜா 107 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தருக்கு இது முதல் சதம் ஆகும். இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி வரும் 31-ம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.