சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியின் யு-19 பிரிவில் மணப்பாக்கம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வெற்றி பெற்றது.
சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது.
3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை ஆர்.எம்.கே. கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் கிஷோர், இயக்குனர் ஜோதி நாயுடு, செயலாளர் எலமஞ்சி பிரதீப், பாடசாலா பள்ளியின் முதல்வர் சந்திரிகா பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த தொடரில் 200 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். தொடக்க நாளில் யு-19 பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் மணப்பாக்கம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 17-7 என்ற கணக்கில் நாராயணா இ-டெக்னோ பள்ளியையும், முகப்பேர் டிஏவி 28-16 என்ற கணக்கில் ஸியோன் பள்ளியையும் தோற்கடித்தன.
யு-17 பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் இன்டர்நேஷனல், நிகேதன் பாடசாலா, வைரம்ஸ் பப்ளிக் பள்ளி அணிகளும், யு-14 பிரிவில் கேகே நகர் பிஎஸ்பிபி பள்ளியும் வெற்றி பெற்றன.