மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் ஷுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு எப்படி என்பதை பார்ப்போம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 15 பேரை உள்ளடக்கிய இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று (19-ம் தேதி) நடைபெற்றது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.
இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
ரிசர்வ் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜுரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்திய அணி எப்படி? – தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்புகள் அதிகம். இவர்களுடன் மூன்றாவது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஷுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடி இருந்தார். அதன் பின்னர் இப்போதுதான் டி20 அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோடு அணியின் துணை கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால் ஆடும் லெவனில் அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதி என்ற சூழல் உள்ளது.
மிடில் ஆர்டரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் உள்ளனர். ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக அணியில் உள்ளனர். அக்சர் படேல் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இடம்பெற்றுள்ளார். அவர் பேட்டிங் ஆர்டரில் நடுவரிசை மற்றும் பின் நடுவரிசை என மாற்றத்துடன் ஆடக்கூடிய திறன் கொண்டவர். அவரை அணி நிர்வாகம் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை கடந்த காலத்தில் நாம் பார்த்தது உண்டு.
ஃபினிஷர் ரோலில் ஜிதேஷ் சர்மா மற்றும் ரிங்கு சிங் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் வலு சேர்க்கின்றனர். துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதால் அவர்கள் இருவரும் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பு அதிகம். வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப், பும்ரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் உள்ளனர். இவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு இருக்காது. அர்ஷ்தீப் இடதுகை பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.