நேற்று யுஏஇ அணிக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது போன்ற அர்த்தமற்ற போட்டிகளில் என்ன சுவாரஸ்யம் உள்ளது? ஆனாலும் சூரியகுமார் யாதவ் செய்த ஒரு காரியத்தினால் அது சர்ச்சையாகியுள்ளது.
யுஏஇ அணி பேட் செய்து கொண்டிருந்த போது, 13-வது ஓவரில்தான் அது நடந்தது. ஷிவம் துபே பந்தை சித்திக் ஆட முயன்று தோல்வி அடைந்தார், பந்து சஞ்சு சாம்சனிடம் வர சித்திக் கிரீஸுக்கு வெளியே இருந்ததால் சஞ்சு த்ரோ செய்து ரன் அவுட் செய்தார். ஆனால் சித்திக் கிரீஸிற்கு வெளியே நின்றிருந்த போது ஷிவம் துபே பந்து வீசும் போது தவற விட்ட டவலை நோக்கி கையைக் காட்டினார்.
ஸ்கொயர் லெக் அம்பயர் தீர்ப்பை 3வது நடுவரிடம் முறையிட்டார். ஆனால் சூரியகுமார் யாதவ் நேர் அம்பயரிடம் சென்று சிறிது நேரம் பேசி விட்டு அப்பீல்லை விலக்கிக் கொள்வதாகத் தெரிவிக்க சித்திக் பேட்டிங்கைத் தொடர்ந்தார். ரீப்ளேக்களைப் பார்த்த பிறகுதான் சூரியகுமார் யாதவ் ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்டுடன் முறையீட்டை விலக்கிக் கொள்வதாகத் தெரிவித்தார். ஆனால் அதே வேளையில் மூன்றாவது நடுவர் சித்திக் ரன் அவுட் என்று தீர்ப்பளித்தார்.
பிறகு இதனால் ஒன்றும் ஆகிவிடவில்லை. சித்திக் பிற்பாடு ஷிவம் துபேவிடமே அவுட் ஆனார். சூரியகுமார் யாதவ்தான் கேட்ச் எடுத்தார். யுஏஇ 55/9 என்று ஆனது. யுஏஇ 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ டைம் அவுட் நிகழ்ச்சியில் பேசிய போது, “சூரியகுமாரின் இந்த முடிவு அப்போதைய ஆட்ட நிலை பொறுத்தது, இந்தியாவுக்குச் சாதகமான நிலை கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகியிருந்தது.
இதே செப்டம்பர் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் ஆடும்போது ஆட்டம் இருஅணிகளுக்கும் சமவாய்ப்பில் இருக்கும் போது சல்மான் ஆகா இது போன்று அவுட் ஆனால் அப்பீலை சூரியகுமார் யாதவ் விலக்கிக் கொண்டு ஆட சம்மதிப்பார் என்று நான் கருதவில்லை.
சஞ்சு சாம்சனின் உடனடி த்ரோ அருமையானதாக அமைந்தது. நேராக ஸ்டம்பை அடித்தது. என்னைப் பொறுத்தவரை சித்திக் அவுட் தான். ஆனால் அபிப்ராயங்கள் மாறுபடலாம். என்ன பிரச்சனை எனில் சூரியகுமார் யாதவ் செய்கையுடன் உடனே விளையாட்டு அறம், பெருந்தன்மை என்றெல்லாம் சொற்களைக் கொண்டு வரும்போதுதான் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கிறது. ஏனெனில், ‘இன்று இப்படிச் செய்தாய், நாளை செய்வாயா? அதை நீங்கள் செய்வீர்களா?
பந்தை நிக் செய்து விட்டு நடுவர் தீர்ப்பு வரும் முன்னரே நடந்து பெவிலியன் செல்வாரா? என்ற கேள்விகளைக் கிளப்பும். அப்படி எட்ஜ் செய்து விட்டு நடுவர் அவுட் தராமல் இவரே போக மறுக்கும் போது அவர் ஒரு போலி வேடதாரி போலவே காட்சியளிப்பார். சூரியகுமார் மீண்டும் இப்படிச் செய்வார் என்றோ அல்லது செய்ய மாட்டார் என்றோ நான் கூற வரவில்லை.
விதிகளின் படி அது அவுட், ஆகவே அவுட்தான். அம்பயர் அவுட் கொடுத்தாரா அது அவுட் என்று விட்டு விடுங்கள். அவ்வளவுதான்.” என்று பொரிந்து தள்ளினார் ஆகாஷ் சோப்ரா.