ஷென்சென்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, டென்மார்க்கின் ஜூலி டாவல் ஜேக்கப்சனை எதிர்த்து விளையாடினார். 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-4, 21-10 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த ஆண்டில் சிந்து 6 தொடர்களில் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறிய நிலையில் தற்போது 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் சவு தியென் செனுடன் மோதினார். இதில் ஆயுஷ் ஷெட்டி 19-21, 21-12, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ருத்விகா காடே, ரோகன் கபூர் ஜோடி 17-21, 11-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யூச்சி ஷிமோகாமி, சயாக ஹோபரா ஜோடியிடம் வீழ்ந்தது.