ஜெய்ப்பூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் யஷ் தயாள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது ராஜஸ்தான் மாநில காவல் துறை.
27 வயதான அவர், ஏற்கெனவே உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், அவர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனெர் சதார் காவல் நிலையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை அன்று யஷ் தயாள் மீது போக்சோ மற்றும் பிஎன்எஸ் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக சங்கனெர் சதார் காவல் நிலைய அதிகாரி அனில் ஜெய்மான் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர் கடந்த 2023-ல் 17 வயது சிறுமியாக இருந்த போது யஷ் தயாள், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரலிலும் விடுதி ஒன்றில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை பாதிக்கப்பட்டவர் தெரிவித்ததாக அனில் ஜெய்மான் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்கு கேரியர் சார்ந்து உதவி அளிப்பதாக சொல்லி யஷ் தயாள் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக யஷ் தயாள் எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக உள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தர பிரதேச அணிக்காக அவர் விளையாடி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காக விளையாடி உள்ளார். தற்போது ஆர்சிபி அணியில் அவர் தக்கவைக்கப்பட்ட வீரராக உள்ளார்.