ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதம் எடுக்கும் தீர்மானத்தை இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் கிராலி, பென் டக்கெட் போன்றோர் கிண்டல் தொனிக்க வசைபாடியதை ரவிச்சந்திரன் அஸ்வின் தன் யூடியூப் சேனலில் கிழித்துத் தொங்க விட்டுள்ளார்.
ஜடேஜா ஆட்டத்தை முடிக்க மறுத்ததை அடுத்து, அவரிடமும் சுந்தரிடமும் இங்கிலாந்து வீரர்கள் வாய்க்கு வந்தபடி பேசியுள்ளனர். ‘என்ன ஒரு மணி நேரத்தில் சதம் எடுத்து விடுவீர்களா?’, ‘ஹாரி புரூக் பந்து வீச்சில் சதம் எடுக்க வேண்டுமா?’ என பென் டக்கெட் கேட்க, ‘அட! கைகொடுப்பா ஜடேஜா’, ‘சதம் எடுக்க வேண்டுமெனில், இன்னும் வேகமாக அடித்து ஆடியிருக்க வேண்டும்’ என ஜாக் கிராலி சொல்லியிருக்கிறார்.
இப்படியாக இங்கிலாந்து வீரர்கள் மாறி மாறி ஜடேஜாவிடமும், வாஷிடங்டன் சுந்தரிடமும் அவமானப்படுத்தும் நோக்குடன் பேசியுள்ளார்கள். அங்கு இந்திய ரசிகர்கள் இருவரும் சதம் எடுக்க வேண்டும் என்று பார்த்து வருகின்றனர். அவர்களுக்காக மட்டுமல்லாமல், வாஷிங்டன் சுந்தர் சுவர் போல் நின்று ஆடியதற்கும், ஜடேஜா கடந்த போட்டியின் ஏமாற்றங்களைப் போக்கி ஏமாற்றத்தை இங்கிலாந்துக்கு அளிக்கவும் தீர்மானித்தனர். இருவரும் சதம் எடுப்பதில் தெளிவாக இருந்தனர். இது இவர்களது உரிமையும் கூட. ஆனால், இங்கிலாந்து அணியினர் அசிங்கமாக நடந்து கொண்டனர் என்று ரவிச்சந்திரன் கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.
“உங்களால் வெற்றி பெற முடியவில்லையா? வெறுப்பாக இருக்கிறதா, போ! உன் வீரர்களுடன் மோது. பந்தை ஓங்கி ஒரு குத்து விடு. என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், சதம் எடுக்கக் கூடாது என்று கைகுலுக்க வருகிறீர்கள் என்றால் ‘நான் வெறுப்பில் இருக்கிறேன், நீங்களும் சதம் எடுக்கக் கூடாது’ என்பது போலல்லவா இருக்கிறது. இது எப்படி இருக்கு?
காலையிலிருந்து கடினமான ஆட்டத்தை ஆடியுள்ளனர். ஆர்ச்சரைத் தடுத்தாட்கொண்டனர். மேத்யூ ஹோகார்ட், டேரன் காஃப், பிளிண்டாஃப் என்று நீங்கள் யாரைக் கொண்டு வந்தாலும் அவர் ஆடுவார். அவர் சதத்தை மட்டும் விட்டு விட வேண்டுமா? நீங்கள் கேட்கிறீர்கள் ‘ஹாரி புரூக் பந்தில் சதம் எடுக்க வேண்டுமா’ என்று. அதெல்லாம் இல்லை, அவர் சதம் எடுக்க வேண்டும், அவ்வளவே. ஆண்ட்ரூ பிளிண்டாஃபையே கொண்டு வாருங்களேன், நாங்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டோம். ஹாரி புரூக்கிடம் கொடுத்தது நீங்கள், அது எங்கள் பிரச்சினையல்ல.
கிரெக் சாப்பல் ஒருமுறை பந்து வீசுவதற்குப் பதிலாக பந்தை உருட்டினார். அப்படிச் செய்ய வேண்டியதுதானே? என்ன விதி வேண்டிக்கிடக்கிறது. இரு கேப்டன்களும் முடிவெடுத்தால்தான் ஆட்டத்தை முடித்துக் கொள்ள முடியும். ஒருவர் மட்டும் முடிவெடுத்தால் போதாது. தன் பவுலர்களை களைப்படையச் செய்ய விரும்பவில்லையாம். இது ஒரு காரணம் என்கிறார் ஸ்டோக்ஸ். சரி, ஆனால் உண்மையான எண்ணம் என்ன? ‘நான் வெறுப்படைந்தேன், நான் மகிழ்ச்சியாக இல்லை, நீங்களும் மகிழ்ச்சியடையக் கூடாது’ என்பதுதானே பென் ஸ்டோக்ஸின் மனநிலை.
நான் கேப்டனாக இருந்திருந்தால் 15 ஓவர்களையும் வீசிவிட்டுத்தான் அவர்கள் போயிருக்க முடியும். நீங்கள்தான் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு விளம்பரத் தூதர். ஹாரி புரூக்குடன் சேர்ந்து 15 ஓவர்கள் நீங்கள் வீசியிருக்க வேண்டும். இது ஸ்பிரிடி ஆஃப் கிரிக்கெட்டுக்கு நல்ல விளம்பரமாக இருக்கும். இந்த விளம்பரம் சுனில் கவாஸ்கர், ரிஷப் பந்த் செய்ததை விட சிறந்த விளம்பரமாக இருந்திருக்கும்.
விரைவாக ரன் எடுத்திருந்தால் சதம் எடுத்திருக்கலாமே என்கிறார் கிராலி. அது பேட் செய்பவருடைய விருப்பம். எப்போது அடிக்க வேண்டும், எப்போது அடிக்கக் கூடாது என்பது பேட்டரின் சாய்ஸ். நீங்கள் வேண்டுமானால் விரைவில் ரன் எடுக்கப் போய் அவுட் ஆகலாம். அது உங்கள் ஆட்டம். ஜாக் கிராலியாகட்டும், பென் ஸ்டோக்ஸ் ஆகட்டும், தாங்கள் சதம் எடுக்க வேண்டுமென்றால் கைகுலுக்க வருவார்களா, முடித்துக் கொள்ளலாம் என்பார்களா? எனக்கு சிரிப்பாக இருக்கிறது. பைத்தியக்காரத்தனம். அதனால்தான் சொல்கிறேன்… இது டிரா அல்ல, இந்திய வெற்றி” என்று போட்டு சாத்தியெடுத்துள்ளார் அஸ்வின்.