அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய அந்த அணிக்கு தொடக்க ஓவர்களில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் வேகக்கூட்டணி கடும் அழுத்தம் கொடுத்தது. தொடக்க வீரரான டேக்நரைன் சந்தர்பால் 11 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரரான ஜான் கேம்பல் 8 ரன்களில் பும்ரா பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பிரண்டன் கிங் 13 ரன்களில் சிராஜின் அற்புதமான இன் ஸ்விங் பந்தில் போல்டானார். அலிக் அதானஸ் 12 ரன்களில் 2-வது சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 42 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் ராஸ்டன் சேஸுடன் இணைந்து ஷாய் ஹோப் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார்.
மதிய உணவு இடைவேளை நெருங்கிய நிலையில் குல்தீப் யாதவ் தனது அபாரமான சுழலால் ஷாய் ஹோப்பை போல்டாக்கினார். ஷாய் ஹோப் 36 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சேர்த்தார். உணவு இடைவேளைக்கு பின்னர் ராஸ்டன் சேஸ் (24), சிராஜ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அறிமுக வீரரான ஹாரி பியர் 11 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ஜஸ்டின் கிரீவ்ஸ் 48 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் யார்க்கரில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். தொடர்ந்து ஜோகன் லைனையும் (1), பும்ரா ஸ்டெம்ப் சிதற வெளியேற்றினார். கடைசி விக்கெட்டாக ஜோமல் வாரிக்கன் (8) குல்தீப் யாதவ் பந்தில் நடையை கட்டினார். முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4, ஜஸ்பிரீத் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 38 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 54 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்டன் சீல்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 7 ரன்களில் ராஸ்டன் சேஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
தனது 20-வது அரை சதத்தை கடந்த கே.எல்.ராகுல் 114 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில் 42 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இந்திய அணி.
‘6-வது முறையாக டாஸ் போச்சு’: மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் டாஸில் தோல்வி அடைந்தார். கேப்டனாக பொறுப்பேற்று 6-வது முறையாக அவர், டாஸை இழந்துள்ளார். இந்த வகையில் அதிகபட்சமாக நியூஸிலாந்தின் பெவன் காங்டன், கேப்டனாக முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் டாஸில் தோல்வி அடைந்திருந்தார்.
‘யார்க்கரில் 12’: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதில் 2 விக்கெட்களை யார்க்கரில் கைப்பற்றியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை பும்ரா 198 பந்துகளை யார்க்கராக வீசி 77 ரன்களை வழங்கி 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
‘இந்திய மண்ணில் 3-வது அறிமுகம்‘: இந்திய அணிக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் காரி பியர் அறிமுக வீரராக களமிறங்கினார். அவர், டி 20 கிரிக்கெட்டில் கடந்த 2018-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியிலும், 2019-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியிலும் அறிமுகமாகி இருந்தார்.
‘குறைந்த ஓவர்களில்’: அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 44.1 ஓவர்களில் ஆட்டமிழந்தது. இந்திய மண்ணில் வெளிநாட்டு அணி குறைந்த ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு ஈடன் கார்டனில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போடடியில் வங்கதேச அணி 30.3 ஓவர்களுக்கு சுருண்டிருந்தது.
‘விரைவாக 50 விக்கெட்கள்’: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவர், குறைந்த பந்துகளில் (1,747) விரைவாக 50 விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்தார். வங்கதேச அணிக்கு எதிராக 11, இங்கிலாந்துக்கு எதிராக 23, நியூஸிலாந்துக்கு எதிராக 3, இலங்கைக்கு எதிராக 10, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் பும்ரா.