லண்டன்: இங்கிலாந்து அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய வீரர் சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது என அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறியுள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 22 ரன்களில் தோல்வியை தழுவியது. வெற்றிக்காக களத்தில் இந்தியா போராடியது எல்லோரையும் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் அரண்மனையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆடவர் மற்றும் மகளிர் அணியினரை மன்னர் சார்லஸை சந்தித்தார். அப்போதுதான் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோருடன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி குறித்து மன்னர் சார்லஸ் பேசியுள்ளார்.
“மன்னரை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களது உரையாடல் சிறப்பாக இருந்தது. எங்கள் அணியின் கடைசி பேட்ஸ்மேன் (சிராஜ்) அவுட் ஆன விதம் மிகவும் துரதிருஷ்டவசமானது என மன்னர் கூறினார். பந்து உருண்டு சென்று ஸ்டம்ப்பை தகர்த்தது. அதை ஓர் அணியாக நாங்கள் எப்படி ஃபீல் செய்கிறோம் எனவும் மன்னர் கேட்டார். ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் சென்று இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று அவரிடம் சொன்னோம். நிச்சயம் அடுத்த இரண்டு ஆட்டங்களில் சிறப்பான செயல்திறனை நாங்கள் வெளிப்படுத்துவோம் என சொன்னோம்” என கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டி 5 நாட்கள் வரை நீடிப்பதும், கடைசி செஷனில் வெற்றிக்கு 20+ ரன்கள் / 1 விக்கெட் மட்டுமே தேவைப்படும் சூழல் இருந்தால் அதன் அசல் வெற்றி கிரிக்கெட்டுக்குதான் என்று கேப்டன் கில் சொல்லியிருந்தார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் ஹைலைட்ஸை மன்னர் சார்லஸ் பார்த்ததாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.