சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் – ஷிராக் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட் ஜோடி, 41-வது இடத்தில் உள்ள மலேசியாவின் சூங் ஹான் ஜியான், முஹம்மது ஹைகல் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஷாட்விக்-ஷிராக் ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 2-வைத்து சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் சபர் காரியமன் மற்றும் முஹம்மது ரெசா ஜோடியை 19-21, 21-16, 21-18 என்ற கணக்கில் ஷாட்விக் – ஷிராக் இணைந்து வீழ்த்தினர். இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 17-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்சயா சென், 19-ம் நிலை வீரரான சீன தைபேவின் லின் ஹன் யியுடன் மோதினார். இதில் முதல் செட்டை லக்சாய சென் 21-15 என கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுதத லின் ஹன் அந்த செட்டை 21-17 என தன்வசப்படுத்தினார்.
இதனால் வெற்றியை தீர்மானித்த கடைசி செட் ஆட்டம் பரபரப்பானது. இதில் லக்சயா சென் 5-13 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்த நிலையில் முதுகு வலி காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் லின் ஹன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி காடே ஜோடி 21-16, 21-19 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சென் ஹி யி, பிரான்செஸ்கா கோர்பெட் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும் ஹாங்காங்கின் டாங் சுன் மற்றும் டீஸ் யிங் சூட் ஜோடியிடம் நேர் செட்களில் வீழ்ந்தனர்.