மும்பை: கடந்த 2023-ல் இந்திய கிரிக்கெட் அணியின் லீட் ஜெர்ஸி ஸ்பான்சராக ‘ட்ரீம்11’ அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ரூ.358 கோடி என்ற ஒப்பந்தத்தின் கீழ் இது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, அதன் ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர் இல்லாமல் களம் காணுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த வியாழக்கிழமை அன்று ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-னை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதா தான் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் லீட் ஸ்பான்சராக உள்ள ட்ரீம்11-க்கு சிக்கல் ஆகியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும். இவற்றை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு இந்த மசோதா முடிவு கட்டும் எனத் தெரிகிறது. அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கெனவே அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை உள்ளது. புதிய மசோதாப்படி ஆன்லைன் சூதாட்டத்துக்கும் அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஆன்லைன் ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் மற்றும் சூதாட்ட தளங்கள் என்ற பிரிவின் கீழ் ட்ரீம்11 வருகிறது. அதுதான் இப்போது சிக்கலாக அமைந்துள்ளது. இந்த மசோதா காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் லீட் ஜெர்ஸி ஸ்பான்சர் என்ற அங்கீகாரத்தை ட்ரீம்11 இழக்கக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும் இது தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வமாக இந்திய கிரிக்கெட் அணி எதுவும் அறிவிக்காமல் உள்ளது. ‘மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வரும் அனைத்து கொள்கையையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பின்பற்றும்’ என பிசிசிஐ-யில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கூறியுள்ளார். அது இப்போது கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், பணம் வைத்து விளையாடும் கேம்ஸ் மற்றும் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் ட்ரீம்11 அறிவித்தது குறிப்பிடத்தக்கது.