ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்கு மாற்றப்படுவார் என்ற தகவல்கள் இப்போது ஐபிஎல் வட்டாரங்களில் பலமாக சுழன்று வருகின்றன. வழக்கம் போல் மறுப்புகள் இருந்து வந்தாலும், இப்படி மறுப்புகள் எல்லாம் கடைசியில் உண்மையாக மாறியதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம், உதாரணம், குஜராத்தில் இருந்து மும்பைக்கு ஹர்திக் பாண்டியா தாவுவார் என்ற செய்தியும் இப்படித்தான் மறுக்கப்பட்டது. பிறகு என்னவாயிற்று? அதேபோல் இப்போது சிஎஸ்கேவுக்கு சஞ்சு மாற்றப்பட்டால் தோனிக்கு அவர் சிறந்த மாற்றுதான் என்கிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
இது தொடர்பான வதந்திகள் குறித்து ஸ்ரீகாந்த் கூறும்போது, “இது உண்மையானால் சிஎஸ்கேவின் தோனிக்கு சஞ்சு சாம்சன் தான் சிறந்த மாற்று” என்று ஆமோதித்துள்ளார். அவர் தன் யூடியூப் சேனலில் கூறியது: “செய்திகளின்படி பார்த்தால் சஞ்சு சாம்சனுக்கும் ராகுல் திராவிட்டுக்கும் ஏதோ கருத்து வேறுபாடுகள் இருக்கும் போல் தெரிகிறது. ஆனால் எனக்கு முழுக்கவும் என்ன நடக்கிறது என்பது தெரியாது.
அணி உரிமையாளர் தரப்பிலிருந்தும் கோணத்திலிருந்தும் பார்த்தால் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு பெரிய தொகைக்குத் தக்கவைத்துள்ளனர். சஞ்சு சாம்சனைச் சுற்றியே அணியைக் கட்டமைத்துள்ளனர். திடீரென அவரை விடுவித்தால் அணியின் சமச்சீர் நிலை என்ன ஆகும்? 2008-குப் பிறகே ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை.
2022-ல் தான் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு 2008-க்குப் பிறகு தகுதி பெற்றனர். ஆகவே, சஞ்சு சாம்சனை அவர்கள் எளிதில் கொடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ரியான் பராக்கை கேப்டனாக்க வேண்டுமென்பது அவர்கள் தெரிவாக இருந்தால், அதை ஒன்றும் செய்வதற்கில்லை. இப்பவும் கூட சாம்சனை பேட்டராக நான் அணியில் தக்க வைப்பேன். அவர் ரூ.18 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
சஞ்சு ஒரு பிரில்லியண்ட் பிளேயர், சென்னையிலும் அவர் மிகப் பிரபலம். சென்னையில் அவருக்கு ஒரு நல்ல பிராண்ட் இமேஜ் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு அவர் கிளம்புவதாக இருந்தால் நான் உடனடியாக அவரை சிஎஸ்கேவுக்கு எடுப்பேன். தோனிக்கு சிறந்த மாற்று சாம்சன் தான். தோனி இந்த சீசனில் ஆடலாம், அடுத்த சீசன் நிச்சயம் ஆடுவது கடினம் அப்போது மாற்றம் எளிதாக நடைபெறும். ருதுராஜிடம் கேப்டன்சி கொடுத்திருக்கிறார்கள். அவருடன் தான் தொடர வேண்டும்.” என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.