மான்செஸ்டர்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்தது. இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர் அணிக்கு எதிராக குவித்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா 297 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக உள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்று (செப்.12) மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று, பந்து வீச முடிவு செய்தது. இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்தது.
அந்த அணிக்காக பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தனர். பட்லர், 30 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜேக்கப் பெத்தல், 14 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹாரி புரூக், 21 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மறுமுனையில் விக்கெட்டை இழக்காமல் ஆடிய பில் சால்ட், 60 பந்துகளில் 141 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சால்ட் எட்டினார். அவரது இன்னிங்ஸில் 15 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசி இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 235. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் சேர்த்தது.
305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. மார்க்ரம், ரிக்கல்டன், டெவால்ட் பிரெவிஸ், ஸ்டப்ஸ் உள்ளிட்ட வீரர்கள் அந்த அணியில் இருந்தும் 16.1 ஓவர்களில் 158 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3, சாம் கர்ரன், லியாம் டாசன், வில் ஜேக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ரஷீத் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 146 ரன்களில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை சால்ட் வென்றார். இதன் மூலம் இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுகின்ற அணி டி20 தொடரை வெல்லும்.